திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்! பதறிய பக்தர்கள்! உதவிய இரும்பு பைப்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கீழ் திருப்பதியில் இருந்து நடந்து செல்லும் அலிபிரி நடைபாதையில் நேற்று இரவு பக்தர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அவர்கள் அலறி அடித்துக் கொண்டு கூச்சலிட்டனர். அப்போது அவர்களின் கூச்சலை கேட்டு அங்கு வந்த பாதுகாப்புத் துறையினர் ஓடி வந்தனர்.
அவர்கள் அங்கிருந்த இரும்பு பைப்பை கீழே தட்டி சப்தம் எழுப்பி சிறுத்தைக்கு பயத்தை ஏற்படுத்தினர். இதனால் அந்த சிறுத்தை அங்கிருந்து மீண்டும் காட்டுக்குள் ஓடியது. நல்வாய்ப்பாக எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
சிறுத்தையை பார்த்து மக்கள் பதறிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருப்பதி அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது 7ஆவது மைலில் உள்ள முக்குபாவி என்ற இடத்தில் சிறுத்தை ஒன்று வந்தது. இதை கண்ட பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் விஜிலென்ஸ் அதிகாரிகள் அங்கு வந்து சிறுத்தையை வனத்திற்குள் விரட்டினர்.
அது போல் அதே ஆண்டு மார்ச் மாதம் காளி கோபுரம் அருகே ஒரு சிறுத்தை நடமாட்டம் இருந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த பகுதியில் அந்த நேரத்தில் யாரும் செல்லாததால் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. எனினும் அங்கு கடை வைத்திருப்போர் அச்சத்தில் இருந்தனர். இப்படியாக அவ்வப்போது நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது.

திருப்பதிக்கு பேருந்து, ரயில், விமானம் மூலம் வந்து அங்கிருந்து திருமலை செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து ஏழுமலையான் கோயிலுக்கு செல்லலாம்.
திருமலைக்குச் செல்லும் மலை பாதையில் இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கும் அனுமதி உண்டு. ஆனால் இரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 3 மணி வரை இந்த பாதையில் வாகனங்களில் பயணிக்க அனுமதி இல்லை.
அது போல் கீழ் திருப்பதிக்கு வந்துவிட்டால் ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல இரு நடைபாதைகள் உள்ளன. ஒன்று அலிபிரி நடைபாதை, மற்றொன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை.
இந்த அலிபிரி செக்போஸ்டை தாண்டிதான் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்லும். அங்கு ஒரு பகுதியில் நடைபாதைக்கான படிக்கட்டுகள் உள்ளன. 11 கி.மீ.தூரம் கொண்டது. இது 3,550 படிக்கட்டுகள் ஆகும். காளி கோபுரம் என்ற இடத்தில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

இங்கு காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பகல் 2 மணிக்கு மேல் வரும் பக்தர்கள் வனவிலங்கு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு குழுக்களாக அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பாதையை 3 முதல் 5 மணி நேரத்தில் ஏறிவிடலாம்.
அது போல் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் தொடங்குகிறது. 2.1 கி.மீ. தூரம், 2388 படிகளை கொண்டது. தினமும் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதை ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரத்தில் கடந்துவிடலாம்.
இங்கு 1200 ஆவது படியில் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இந்த டோக்கன்களை கொண்டு இலவச தரிசனம், ரூ 300 தரிசனத்தைவிட நடைபாதை தரிசன பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யலாம். ரூ 300 தரிசன டோக்கன் கிடைக்காதவர்கள், வேண்டுதல் இருப்போர் இந்த நடைபாதைகளை பயன்படுத்தி ஏழுமலையானை தரிசிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications