மிதமான மழைக்கே வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்.. உண்மையில் என்ன காரணம்.. பிரபல வல்லுநர் விளக்கம்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இன்று காலை மிதமான மழை மட்டுமே பெய்தது. ஆனால், அதற்கே அங்குப் பல முக்கிய சாலைகளில் நீர் தேங்கிவிட்டது. இதனால் பெங்களூர்வாசிகள் காலையில் வேலைக்குச் செல்ல பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதற்கிடையே குறைந்த மழைக்கே நீர் தேங்கியது ஏன் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூர் மழையால் பல பகுதிகளில் நீர் சூழ்ந்த நிலையில், இன்று காலை முக்கிய சாலைகளில் டிராஃபிக் மோசமாக இருப்பதாகவும் அதற்கேற்ப மக்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் பெங்களூர் போலீஸ் அறிவுறுத்தியது.

டிராஃபிக் : தண்ணீர் தேங்கியுள்ளதால் வின்ட் டன்னல் சாலையில் கெம்பாபுரா மார்க்கத்தில் டிராஃபிக் அதிகமாக இருந்தது. மேலும், பன்னர்கட்டா சாலை மற்றும் ஜெயதேவாவில் இரு மார்க்கத்திலும் தண்ணீர் தேங்கி இருந்தால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. அதேபோல ருபேனா அக்ரஹாராவில் சில்க் போர்டு மார்க்கத்திலும் டிராஃபிக் பாதிப்பு மோசமாகவே இருந்தது.
ஏற்கனவே மழையால் டிராஃபிக் நெரிசல் மோசமாக இருந்த நிலையில், துபரஹள்ளி மற்றும் குண்டலஹள்ளி பகுதிகளுக்கு இடையே வாகனம் ஒன்று பிரேக் டவுன் ஆகிவிட்டது. இது அப்பகுதியில் டிராஃபிக்கை மேலும் மோசமானதாக மாற்றியது. பெங்களூர் மெட்ரோ பணிகளால் அவுட்டர் ரிங் ரோட் பகுதியிலும் டிராபிக் நெரிசல் அதிகமாக இருந்தது. பாணத்தூர் எஸ் கிராஸ் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி மற்றும் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து டிராபிக் மோசமானது. வேறு சில இடங்களிலும் இதே நிலை தான்.
மிதமான மழை தான்: பெங்களூரில் இன்று அதிகாலை பெய்தது கனமழை எல்லாம் இல்லை, மிதமான மழை தான். ஆனால், இந்த மழைக்கே பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி டிராபிக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே மிதமான மழைக்கே சாலைகளில் நீர் தேங்கியது ஏன் என்பது குறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர் கரீ கவுடா விளக்கியுள்ளார். மிதமான மழை தான் என்றாலும் குறுகிய காலத்தில் பெய்ததே சாலையில் நீர் தேங்கக் காரணம் என கரீ கவுடா தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் மழை பெய்தது. அதன் பிறகும் கூட தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக லேசான மழை பெய்தது. இதுவே மழை நீர் அதிகம் தேங்கக் காரணமாகும்" என்றார்.
கர்நாடக மாநில பேரிடர் மையம் 15 மிமீ முதல் 65 மிமீ வரையிலான மழையை மிதமான மழை என்றும், 65 மிமீக்கு மேல் பெய்யும் மழையைக் கனமழை என்றும் வகைப்படுத்துகிறது. இன்று காலை அதிகபட்சமாகவே பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் 61.5 மிமீ மழை மட்டுமே பதிவானது. இது தவிர வேறு எங்கும் 60 மிமீ மேல் மழை பெய்யவில்லை. பெங்களூரில் மற்ற ஏழு பகுதிகளில் 50 மிமீ மழை மட்டுமே பதிவானது. வேறு நான்கு பகுதிகளில் லேசான மழை மட்டுமே பதிவானது குறிப்பிடத்தக்கது.
பிரச்சினை: கரீ கவுடா மேலும் கூறுகையில், "நள்ளிரவில் பெய்த மழை நீர் வடிந்துவிட்டது. ஆனால், காலையில் குறுகிய நேரத்தில் மழை பெய்ததால் அந்த தண்ணீர் வடியச் சிறிது நேரம் பிடித்தது.. இந்த சாலைகளில் உள்ள வடிகால் அமைப்புகளில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வடிய அதிக காலம் ஆகியிருக்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications