அதென்னப்பா "டிபன் பாக்ஸ்" அரசியல்.. கர்நாடக தேர்தலுக்கு புதிய வியூகம்.. ஜேபி நட்டா அசத்தல் பிளான்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் இப்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அங்குச் சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜக புதிய பிரசார யுக்தியைக் கையில் எடுத்துள்ளது.
கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இப்போது ஆட்சியில் உள்ள நிலையில், விரைவில் அங்குத் தேர்தல் நடக்க உள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இதனால் அங்கு அரசியல் களம் இப்போது சூடுபிடித்துவிட்டது.

கர்நாடக
குறிப்பாக அங்கு பாஜக தீவிரமாக உள்ளது. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. மாநில அரசின் மீது அதிருப்தி இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் அதைச் சமாளிக்கவும் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இப்போது இரண்டு நாள் பயணமாகக் கர்நாடக வந்துள்ளார். இங்குத் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ள நட்டா புதித்தாக டிபன் பாக்ஸ் அரசியலையும் கையில் எடுத்துள்ளார். இந்த புதிய பிரசார யுக்தி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப் பெரியளவில் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

டிபன் பாக்ஸ் அரசியல்
இந்த புதிய டிபன் பாக்ஸ் பிரசாரத்தின்படி, பல்வேறு சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் தங்கள் வீடுகளில் இருந்து உணவைக் கொண்டு வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து உணவைச் சாப்பிட வேண்டும். முன்பு தலித் கட்சி தொண்டர்களின் வீடுகளுக்குச் சென்று பாஜக தலைவர்கள் உணவைச் சாப்பிடுவார்கள். இப்போது அந்த யுக்தியை மாற்றி அனைத்து சாதியினரும் ஒன்றாக வீடுகளில் இருந்து உணவை எடுத்து வந்து பகிர்ந்து சாப்பிடும் யுக்தியைக் கையில் எடுத்துள்ளது. இது சமூகத்தில் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இருக்கும் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பினரும்
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நட்டா, "மாவட்ட தலைவர்கள் அனைத்து சமூகங்களின் உறுப்பினர்களுக்கும் பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்வார்கள். தலித்துகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். பாஜக எந்தவொரு குறிப்பிட்ட மதம் அல்லது சாதிக்கான கட்சி இல்லை. இது அனைத்து தரப்பு மக்களுக்கான கட்சி என்பதையே காட்டும்" என்றார். தொடர்ந்து காங்கிரஸைச் சாடிய அவர், "காங்கிரஸ் என்றாலே கமிஷன், சாதிவெறி மற்றும் ஊழல் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் பாஜக தனது சாதனைகளைத் துணிச்சலுடன் பட்டியலிட்டு வாக்கு கேட்கும்.. கர்நாடகாவிலும் எங்கள் சாதனைகளைப் பட்டியலிட்டே வாக்கு கேட்கிறோம்.

வேற லெவல் பொருளாதாரம்
உக்ரைன் போருக்கு மத்தியிலும், பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் கீழ் நமது பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பிரிட்டனின் பொருளாதாரத்தையே இந்தியா விஞ்சிவிட்டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எல்பிஜி இணைப்பு மற்றும் கழிப்பறைகள் கட்டுமானம், இலவச கோவிட் -19 தடுப்பூசிகள் என்று பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை பாஜகவினர் மக்களிடம் எடுத்துச் சென்றாலே போதும்.. எஸ்சி/எஸ்டி ஒதுக்கீட்டு ஏழு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வொக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு வெவ்வேறு இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர்
தலித் மற்றும் பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவர் ஆக்கியுள்ளோம். பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்தை வழங்கியுள்ளார். இப்படி பாஜக கொண்டு வந்த பல திட்டங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஏன் பாரத ரத்னா வழங்கவில்லை.. மாறாக அவர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை தோற்கடித்தது ஏன் என்று மக்கள் காங்கிரஸை பார்த்துக் கேட்க வேண்டும்.

காங்கிரஸ் மீது அட்டாக்
60 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சியை முடக்கி காங்கிரஸ் நாட்டு மக்களை ஏமாற்றி, துரோகம் செய்துள்ளது.. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த போதிலும், தீவிர வறுமையில் வாழும் மக்களின் விகிதம் 1%ஐ அதிகரிக்க மத்திய அரசு விடவில்லை. காங்கிரஸின் சித்தராமையா முதல்வர் பசவராஜ் பொம்மை குறித்து கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்.. அவரை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். பிரதமர் மோடி ஒருபோதும் இப்படியொரு கீழ்த்தரமான அரசியலைச் செய்ய மாட்டார்.. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது மட்டுமே அவரது நோக்கம்" என்றார்.

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 2018 சட்டசபைத் தேர்தலில் 104 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அவர்களால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்ல முடியவில்லை. 2018இல் எடியூரப்பா ஆட்சி அமைத்த போதிலும், சில நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னரே காங்கிரஸ் கூடன் கூட்டணி அமைத்து ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி முதல்வரானார். இருப்பினும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரும் பாஜகவில் ஐக்கியமானார்கள். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மை இழந்தது. அதன் பிறகு மீண்டும் எடியூரப்பா கர்நாடக முதல்வராகப் பதவிக்கு வந்தார். அதுவும் கூட சில ஆண்டுகள் மட்டுமே நீட்டித்தது. கடந்த 2021இல் எடியூரப்பா நீக்கப்பட்டு, பசவராஜ் பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications