நாட்டிலேயே அதிக கார்களை யாரிடம் இருக்கு.. அம்பானியும் இல்லை, அதானியும் இல்லை.. அப்போ யார் தெரியுமா
பெங்களூர்: நமது நாட்டில் அதிக கார்களை வைத்துள்ள நபர் யார் என்று தேடினால் அது அம்பானியும் இல்லை.. அதானியும் இல்லை.. அவர் பெங்களூரை சேர்ந்த ரமேஷ் பாபு.. யார் இந்த ரமேஷ் பாபு இவர் இத்தனை கார்களை வாங்கியது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
இந்தியா மிகப்பெரிய வணிக நிறுவனங்களையும், மிகப் பெரிய கோடீஸ்வர தொழிலதிபர்களையும் கொண்ட ஒரு நாடு.. டாடா, பிர்லா, அம்பானி, அதானி என்று இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

ஆனால் அவர்களைக் காட்டிலும் ஒருவர் நாட்டில் அதிக கார்களை வைத்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறது.. யார் அவர்.. அவரிடம் எப்படி இத்தனை கார்கள் வந்தன.. அவரது சொத்து மதிப்பு தான் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரமேஷ் பாபு: நமது நாட்டின் தொழிலதிபர்களிடம் சொகுசு வில்லாக்கள், வீடுகள் மற்றும் பிரம்மாண்ட கார் கலெக்ஷன் இருக்கும். ஆனால், எந்தவொரு பிஸ்னஸ்மேனையும் விட இவரிடம் அதிக கார்கள் இருக்கிறது. அவர் தான் முன்பு முடிதிருத்தும் தொழில் செய்து வந்த ரமேஷ் பாபு..
இப்போது தொழில்முனைவோராக இருக்கும் இவரிடம் 400க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கிறது. இவரிடம் மினி மெர்க்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூக்கள், ஜாகுவார்ஸ் என அதி நவீன கார்கள் முதல் அரிய விண்டேஜ் மாடல்களை அவர் அனைத்து டைப் கார்களும் உள்ளன.
30 ஆண்டுகள்: இவர் நம் பெங்களூரில் ரமேஷ் டூர்ஸ் & டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் ரமேஷ் கடந்த 30 ஆண்டுகளாகச் சொகுசு கார்களை வாடகைக்கு விட்டு வருகிறார். 1993ஆம் ஆண்டு ஒரே ஒரு மாருதி ஆம்னியை வாடகைக்கு விட்டு இவர் ஆரம்பித்த பிஸ்னஸ் தான் இன்று இவ்வளவு பெரிதாக வளர்ந்து நிற்கிறது.
ரமேஷ் பாபுவை இப்போது பலரும் இந்தியாவின் 'பில்லியனர் பார்பர்' என்றே அழைக்கிறார்கள். இன்று இவர் மிக பெரிய தொழிலதிபராக இருந்தாலும் கூட இவர் கடந்த வந்த பாதை அவ்வளவு ஈஸியானது இல்லை.
பின்னணி: இன்று, அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தாலும், ஆரம்பத்தில் அவர் பல கஷ்டங்களைச் சந்தித்துள்ளார். குறிப்பாக 1979இல் அவரது தந்தை உயிரிழந்தார். அப்போது ரமேஷுக்கு வெறும் 7 வயதுதான் ஆகியிருந்தது. அப்போது ரமேஷின் தந்தை மட்டுமே சம்பாதித்து வந்த நிலையில், அவரது குடும்பமும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. ரமேஷின் தந்தை அப்போது கோபால் பிரிகேட் சாலையில் முடிதிருத்தும் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது மாமா அந்த கடையைக் கவனித்துக்கொண்டார். அதற்குப் பதிலாக ரமேஷ் குடும்பத்திற்குத் தினசரி 5 ரூபாய் கொடுத்தார். ஆனால், இந்தத் தொகை குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. எனவே, குடும்பத்தைக் காக்க 13 வயதிலேயே நியூஸ் பேப்பர் மற்றும் பால் விநியோகம் செய்யும் வேலையை ஆரம்பித்தார் ரமேஷ்.. ஆனாலும் அவர் தனது படிப்பை விடவில்லை. காலையில் நியூஸ் பேப்பர் மற்றும் பால் விநியோகம் செய்த ரமேஷ் அதன் பிறகு பள்ளி சென்று படித்தார்.
ஆம்னி வேன்: இப்படியே குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தனது படிப்பைத் தொடர்ந்தார், பள்ளிப்படிப்பை முடித்த அவர் தனது மாமாவிடமிருந்த சலூனை மீண்டும் எடுத்து நடத்தினார். ஒரே ஆண்டு.. வெறும் ஒரே ஆண்டில் அவரது சலூன் டிரெண்டிங் ஆனது. அவரது கடின அழைப்பிற்குப் பலன் கிடைத்தது. வருமானம் அதிகரிக்கவே அவர் அதைச் சேர்த்து வைத்தார். அடுத்து என்ன செய்யலாம் என யோசித்த அவர் ஆசை ஆசையாக ஒரு ஆம்னி வேனை வாங்கியுள்ளார்.
தனது மொத்த சேமிப்பு மற்றும் மாமா உதவியுடன் சேர்ந்து இந்த ஆம்னியை 1993இல் வாங்கியுள்ளார். அப்போது இவரது சலூன் கடை தான் அங்கே டிரெண்டிங். இதனால் சலூன் கடையை விட்டு வரவே இவருக்கு நேரம் கிடைக்காது. எனவே, ஆம்னி பெரும்பாலும் சும்மாவே இருந்தது. அப்போது தான் அந்த ஆம்னியை வாடகைக்கு விட முடிவு செய்தார். அப்போது அவர் எடுத்த அந்த சின்ன முடிவு தான் அவரை கோடீஸ்வரனாக உயர்த்தி உள்ளது.
சரியாக கிடைத்த வாய்ப்பு: அதன் பிறகு மெல்ல வருமானம் ஈட்டத் தொடங்கினார். அந்த நேரத்தில் தான் அவருக்குச் சரியான வாய்ப்பு கிடைத்தது. தனது தாயார் சிறு வயதில் இருந்தே பணிபுரிந்து வந்த குடும்பம் மூலம் இவருக்கு இன்டெல் நிறுவனத்திற்கு வாடகைக்கு கார்களை சப்ளை செய்யும் காண்ட்ராக்ட் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாகப் பிடித்துக் கொண்ட அவர் மெல்லத் தனது தொழிலை விரிவுபடுத்தினார். அவரது சேவை சிறப்பாக இருந்ததால்.. பலரும் அவருக்கு காண்ட்ராக்ட் தர ஆரம்பித்தனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இதைத் தொழிலைச் செய்து வருகிறார். இன்று, பெங்களூர் மட்டுமின்றி டெல்லி, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இவர் சேவையை விரிவுபடுத்தியுள்ளார். மேலும், 2004இல் இவர் சொகுசு கார்களை வாங்கி வாடகைக்கு விட ஆரம்பித்துள்ளார். இது ரிஸ்க் ஆன பிஸ்னஸ் என்ற போதிலும், அதையும் வெற்றிகரமாகச் செய்து காட்டினார்.
400+ கார்கள்: இப்போது இவரிடம் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ எனப் பல சொகுசு கார்கள் உள்ளன. இது மட்டுமின்றி இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் காரும் கூட இருக்கிறது. இப்போது இவரிடம் சுமார் 400க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, அதானி ஆகியோரிடம் இருக்கும் கார்களை விட அதிகமாம். மேலும், இப்போது இவரது சொத்து மதிப்பு ரூ. 1200 கோடியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications