சென்னை, ஹைதராபாத், புனே மிஸ்சிங்! பெங்களூர் வானிலை ஆண்டு முழுக்க இதமாக இருக்க காரணம்? 4 விஷயங்கள்!
பெங்களூர்: சென்னை, ஹைதராபாத், மதுரை, கோவை போன்ற தென்னிந்திய நகரங்கள் மும்பை, புனே போன்ற விந்திய மலைக்கு இங்கேயுள்ள நகரங்கள் என ஒப்பிட்டால், பெங்களூரில் மட்டும் ஆண்டு முழுக்க இதமான தட்பவெப்பம் நிலவுகிறது. மற்ற நகரங்களுக்கு இல்லாத சிறப்பு பெங்களூருக்கு மட்டும் எப்படி கிடைத்தது. உண்மையிலேயே பெங்களூரின் நிலவியல் அமைப்பு பிற நகரங்களைவிட அதிருஷ்டவசமானதுதான். எப்படி?
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூர், "ஐடி பூம்" ஆரம்பிக்கும் முன்பு, ஓய்வூதியதாரர்களின் சொர்க்கபுரி என்று அழைக்கப்பட்டது. அதிக வெயிலும் இல்லாமல், உறைய வைக்கும் குளிரும் இல்லாத வானிலை, முதியோருக்கு எப்போது வேண்டுமானாலும் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வரவும், இதமாக ஓய்வெடுக்கவும் வசதியானது என்பதால் இந்த பெயர் வந்தது.
1990களில் ஐடி துறை பெரும் விஸ்வரூபம் எடுக்கவும் தட்பவெப்பம் முக்கிய காரணம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பணியாளர்களுக்கு இந்த கிளைமேட் ரொம்பவே பிடித்திருந்தது என்பார்கள். இப்போதும் பெங்களூரில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்கள், சென்னை ஐடி ஊழியர்களிடம், தாங்கள் ஃபாரினில் இருந்து வருகிறோம் என்பதை போல கலாய்த்து மகிழவும் இந்த தட்பவெப்பம் மற்றும் வாழ்க்கை முறை காரணம். பெங்களூரின் இனிமையான வானிலைக்கு பல காரணங்கள் உள்ளன:

உயரம்: பெங்களூர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 900 மீட்டர் (3,000 அடி) உயரத்தில் (Bangalore Altitude) அமைந்துள்ளது. சென்னை போன்ற கடலோரப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது இந்த அதிக உயரம் குளிர்ந்த வெப்பநிலைக்கு காரணமாக அமைகிறது. எப்போதுமே உயரம் கூட கூட வெப்பம் குறையும் என்பது புவியியல் ஆகும். அதேநேரம், ஊட்டி, கொடைக்கானல் போல 7 ஆயிரம் அடி உயரம் என்றால் குளிர் ரொம்பவே அதிகரித்துவிடும். இது குளிர்காலத்தில் பெரும் கஷ்டத்தை கொடுக்கும். ஆனால் 3000 அடி உயரம் என்பது இதமான தட்பவெப்பத்திற்கு சிறப்பான அமைப்பு. புனே உயரம் 1800 அடி, ஹைதராபாத் உயரம் 1700 அடி. அதாவது கிட்டத்தட்ட பெங்களூர் உயரத்தில் பாதிதான். சென்னையோ கடல் மட்டத்தை ஒட்டிய பகுதி.
புவியியல் இருப்பிடம்: பெங்களூர் தக்காண பீடபூமியில், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலப்பரப்பு இயற்கையாகவே குளிர்ச்சியை வழங்கி வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உதாரணத்திற்கு, கடல்மட்டத்திலிருந்து, 1500 அடி உயரமுள்ள கிருஷ்ணகிரியிலிருந்து 3000 அடி உயரம் கொண்ட பெங்களூருக்கு 90 கி.மீதான். 1500 அடி உயர மலையும் கிருஷ்ணகிரி டூ பெங்களூர் வழித்தடத்தில்தான் உள்ளது. வாகனங்களில் பயணிப்போருக்கு கிருஷ்ணகிரி டூ பெங்களூர் சாலை மேல்நோக்கியதாக செல்வதை உணர முடியும்.
பருவமழை: பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் பருவமழை காலத்தில் பெங்களூரில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யும். மழை இந்த நகரத்தை குளிர்விக்கவும், இனிமையான வெப்பநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. பெங்களூரின் வானிலை பொதுவாக கோடையில் ஓரளவு வெப்பமாக இருந்தாலும் சென்னை அளவுக்கோ, மதுரை அளவுக்கோ வெயில் ஏறிப்போவது கிடையாது. அதிகாலை வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் பகல் நேர வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பருவமழை காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும்போது பெங்களூரில் சராசரியாக 800 மிமீ மழை பெய்யும். குளிர்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இருக்கும், அப்போது அதிகாலை 14 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி அல்லது 27 டிகிரி செல்சியஸ் வரைக்கும்தான் போகும்.

பூங்கா நகரம்: பெங்களூர் "இந்தியாவின் கார்டன் சிட்டி" என்று அழைக்கப்படுகிறது. லால்பாக், கப்பன் பார்க் போன்ற மிகப்பெரிய தாவரவியல் பூங்காக்கள் நகரின் மத்திய பகுதிகளில் அமைந்துள்ளன. இது தவிர ஏரியாவிற்கு ஒரு பூங்கா நன்கு பராமரிக்கப்பட்டுவருகிறது. பெண்கள் குழந்தைகளுக்கு பூங்காக்கள் பாதுகாப்பான இடங்களாகவும் உள்ளன. மாறாக, சென்னை, ஹைதராபாத் மற்றும் புனே போன்ற நகரங்களில் பூங்காக்கள் அளவு குறைவுதான். சென்னையில் பல பூங்காக்களின் குடிகாரர்களின் குடியிருப்புகளாக காணப்படும் கொடுமையும் உண்டு.
பிற நகரங்களின் வெயில்: கோடை காலத்தில் தென் இந்திய பெருநகரங்களின் வெப்பநிலை இப்படித்தான் இருக்கும்.. பெங்களூர் 25 - 35 டிகிரி செல்சியஸ் சென்னையில் 30 - 42 டிகிரி செல்சியஸ், ஹைதராபாத் 28 - 38 டிகிரி செல்சியஸ் புனே 28 - 38 டிகிரி செல்சியஸ். சென்னையில் பெங்களூரை விட சராசரி மழை அளவு அதிகம் என்றாலும் அது பெங்களூரை போல பரவலான மழையாக இருக்காது. வட கிழக்கு பருவழமை காலத்தில் மழை கொட்டி தீர்த்துவிட்டு ஓய்ந்துவிடுகிறது. ஆனால் பெங்களூரில் எல்லா சீசனிலும் சராசரியாக பெய்யும் மழை அதன் இயற்கையை பாதுகாக்கவும், வெப்பநிலையை குறைக்கவும் உதவுகிறது.

வெயில் அதிகரிப்பு: பெங்களூர் ஒப்பீட்டளவில் இனிமையான வானிலையைக் கொண்டிருந்தாலும், நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாறுபாடு காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் வெப்ப நிலையில் மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன, இது காலநிலை விழிப்புணர்வு அவசியத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.


Click it and Unblock the Notifications
