"ஏய் என்ன மூக்கில் இருந்து ரத்தம் வருது".. ஷாக்கான குமாரசாமி! பெங்களூர் பிரஸ்மீட்டில் என்ன நடந்தது?
பெங்களூர்: பெங்களூரில் இன்று நடந்த பிரஸ்மீட்டில் மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி பேசியபோது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பிரஸ்மீட்டின்போது என்ன நடந்தது என்பது தொடர்பான விபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இவர் மைசூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்நிலையில் தான் மூடா எனும் மைசூரு மாநகர வளர்ச்சி குழுமத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகளாக உள்ள பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அதாவது மூடாவுக்கு சொந்தமான காலி மனைகளை சட்டப்பூர்வமாக ஏலம் விடாமல் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டிற்கும் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கும் தொடர்பு உள்ளது. இதனால் சித்தராமையாவுக்கும் முறைகேட்டில் தொடர்பு உள்ளது எனக்கூறி வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக கர்நாடக சட்டசபை மற்றும் மேலவைகளில் விவாதிக்க வேண்டும் என்று கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் இரவில் தங்கி தர்ணாவிலும் ஈடுபட்டாலும் கூட அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தான் மூடா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் இருந்து அவர்கள் பாதயாத்திரையாக மைசூர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பான பிரஸ்மீட் தான் இன்று பெங்களூரில் நடந்தது. இதில் ஜேடிஎஸ் மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் பாஜக மாநில தலைவரான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த பிரஸ்மீட்டில் குமாரசாமி பேசினார். அப்போது அவர் மூடாவில் எப்படி முறைகேடு நடந்துள்ளது என்பது விளக்கி கொண்டிருந்தார். இந்த வேளையில் பிரஸ்மீட்டின் நடுவே அவர் அடிக்கடி மூக்கை கை வைத்து சில முறை தடவினார். அவரது முகத்தில் லேசான மாற்றம் தென்பட்டது. இத்தகயை சூழலில் தான் திடீரென்று மூக்கில் இருந்து சில துளி ரத்தம் என்பது வந்தது.
இதனை கவனித்தவுடன் அங்கிருந்தவர் கைக்குட்டையை வழங்கினர். அதனை வாங்கிய குமாரசாமி மூக்கை துடைத்தார். அப்போது கைக்குட்டை ரத்தமான நிலையில், ‛‛ஏ என்ன மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது' எனக்கூறி குமாரசாமி அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் அவர் பிரஸ்மீட்டில் பேசுவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து சித்தராமையாவை விமர்சனம் செய்தார்.
இந்த வேளையில் அவருக்கு கைக்குட்டையை விட சற்று பெரிய துண்டு வழங்கப்பட்டது. மடித்து வழங்கப்பட்ட அந்த துண்டை வைத்து அவர் தனது மூக்கை துடைத்தபோது ரத்தம் வேகமாக சொட்டி அவரது சட்டையில் படிந்தது. இதனை பார்த்ததும் அருகே இருந்த பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எடியூரப்பா, பிரகலாத் ஜோஷி, விஜயேந்திரா உள்ளிட்டவர்கள் போதும் போதும்.. எனக்கூறி அவரை கிளம்ப கூறினர்.
இதையடுத்து மூக்கை சிறிய துண்டால் பொத்தியபடி குமாரசாமி பிரஸ்மீட்டில் இருந்து வெளியேறி காரில் ஏறி மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
