கர்நாடகா தேர்தல்: மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறதா பாஜக? ஜீ நியூஸ் கருத்துக்கணிப்பில் பரபர முடிவுகள்!
பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ஜீ நியூஸ் - மேட்ரைஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் யாருக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி பாஜக, காங்கிரஸ் கட்சியை முந்துகிறது.
ஜீ நியூஸ் செய்தி நிறுவனம் மேட்ரைஸுடன் இணைந்து கர்நாடகாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியது.
கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 28 வரை 56,000க்கும் அதிகமான மக்களிடையே இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

மோடி கேம் சேஞ்சரா?
ஜீ நியூஸ்-மேட்ரைஸ் இணைந்து நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பில், எதிர்வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி கேம் சேஞ்சர் என்பதை நிரூபிப்பாரா? என்பது தான் முதல் கேள்வியாக முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த 31% பேர் பிரதமர் மோடி ஒரு கேம் சேஞ்சர் என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம் 32% பேர் மோடி ஒரு கேம் சேஞ்சர் என்பதை ஏற்கவில்லை. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், அரசின் செயல்பாடுகளில் கர்நாடக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா என்ற கேள்வியும் கருத்துக்கணிப்பில் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த 37% பேர் மோடி தலைமையிலான ஆட்சியில் திருப்தி அடைவதாகவும், 23% பேர் திருப்தி இல்லை என்றும் கூறியுள்ளனர்.

ராகுல் காந்தி யாத்திரையால் காங்கிரஸுக்கு பிளஸ்
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பலன் கொடுக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த 22% பேர், ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு பெரியளவில் பலன் கிடைக்கும் என்றும், 41% பேர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவகையிலும் உதவாது என்றும் கூறியுள்ளனர்.

வோட் ஷேரிங் - காங்கிரஸ் அதிகம்
2023 கர்நாடக சட்டசபை தேர்தலில் கட்சி வாரியாக ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் ஜீ நியூஸ் தனது கருத்துக்கணிப்பில் வெளியிட்டுள்ளது. யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸ் என 40.4% பேரும், பாஜக என 38.3% பேரும்,
மதச்சார்பற்ற ஜனதாதளம் என 16.4% பேரும், மற்றவை என 4.9% பேரும் தெரிவித்துள்ளனர்.

அதிக சீட் யாருக்கு?
2023 கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதையும் Zee News-Matrize தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக 96-106 இடங்களைப் பெறும் என்றும், காங்கிரஸ் கட்சி 88-98 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் 23-33 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மற்றவர்கள் 2-7 இடங்களைப் பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பலிக்குமா?
கர்நாடகாவில் கடந்த 1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த அரசியல் கட்சியும் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜீ நியூஸ் கணிப்பு, பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும், ஆனால், பெரும்பான்மை பெறமுடியாது எனத் தெரிவித்துள்ளது. பாஜக - காங்கிரஸ் கட்சிக்கு இடையே 10 சீட்கள் முன்னே பின்னே இருக்கலாம் என ஜீ நியூஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி தேர்தல் முடிவுகள் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications