மேகமலைக்கு ராணுவம்.. உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்.. 12500 ஏக்கரை அழித்து மேகதாது கட்ட அனுமதிக்குமா?
பெங்களூரு: தேனி மாவட்டம் மேகமலையில் பல ஆண்டுகளாக வசித்த மக்களையே ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற வேண்டும் என்றும், அவர்களை வெளியேற்ற துணை ராணுவத்தை அனுப்புவோம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், 12,500 ஏக்கர் வனப்பகுதியில் ஒன்பது லட்சம் மரங்களை அழித்து மேகதாது அணை கட்ட எப்படி அனுமதி அளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேகதாது அணை தொடர்பான முக்கியமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
மேகதாது அணை கட்ட 9 லட்சம் மரங்கள் வெட்ட முதல்வர் டிகே சிவகுமார் தலைமையிலான கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை கட்ட 12,500 ஏக்கர் வனப்பகுதியை அழித்து, மொத்தம் 8.90 லட்சம் மரங்களை வெட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக, தட்சிண கன்னடா, ஷிவமொக்கா மாவட்ட வனப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டுவது தொடர்பான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையை பார்க்கும் போது, தமிழ்நாட்டின் அனுமதி தேவை, தேவையில்லை என்பதை தாண்டி, மத்திய அரசு மேகதாது அணையை கட்ட அனுமதி மறுப்பதற்கு முதன்மையான காரணம் 12,500 ஏக்கர் வனப்பகுதி அழிக்கும் முடிவு தான். சுமார் 9 லட்சம் மரங்களை மத்திய அரசு அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ளாது. அதுவே மேகதாது அணைக்கு உள்ள முதன்மையாக சிக்கல். இது தொடர்பான வழக்குகள் பசுமை தீர்ப்பாயத்தில் தான் முதலில் போகும். அங்கேயே அதற்கு தடை விதிக்கப்படும். அதனையும் மீறி சென்றாலும், உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக ஒப்புகொள்ளாது.
ஏனெனில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று தேனி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வருசநாடு, மேகமலை வனப்பகுதியில் 3 தலைமுறையாக வசித்து வரும் மக்களையே தமிழக அரசு வெளியேற்ற வேண்டும்.. அப்படி வெளியேற்ற மறுத்தால், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற துணை ராணுவத்தையே நாங்கள் அனுப்புவோம் என்றும், மின்சாரம், குடிநீர் என அனைத்தையும் துண்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அப்படி கடுமையான உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், செப்டம்பர் மாதம் வரை தான் தமிழக அரசுக்கு அவகாசம் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் எந்த அளவிற்கு தமிழக அரசின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கும் என்பது உண்மையில் மிகப்பெரிய கேள்விக்குறி தான்.
இப்படியான சூழல்கள் இந்தியாவில் உள்ள நிலையில், 12,500 ஏக்கர் வனப்பகுதியில் ஒன்பது லட்சம் மரங்களை அழித்து மேகதாது அணை கட்ட எப்படி அனுமதி அளிக்கும்? உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டுமா என்று கேட்டால்.. உண்மையில் மத்திய அரசு தான் அனுமதி அளிக்க வேண்டும்.. பிரச்சனை அது இல்லை. யாராவது ஒருவர் பொதுநல வழக்கு போட்டால், (ஏற்கனவே வழக்குகள் உள்ளன) கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பே இல்லை.. மத்திய அரசும் அவ்வளவு எளிதாக அனுமதி அளித்துவிடாது. அப்படி அனுமதி அளித்தால், உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் மத்திய அரசு தான் நிற்க வேண்டியதிருக்கும். அந்த அளவிற்கு உச்ச நீதிமன்றம் காடுகள் விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை தான் கடைபிடித்து வருகிறது.
மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கும். மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதை தாண்டி, உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு சிறப்பு அதிகாரம் இருக்கிறது. என்ன தான் நாடாளுமன்றே சட்டம் போட்டு எந்த விஷயத்தை கொண்டு வந்தாலும், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். உச்ச நீதிமன்ற அந்த சட்டத்தை ரத்து செய்யவும் அதிகாரத்தை பெற்றுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடும் எந்த சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவே ஏற்காது. எனவே மேகதாது விவகாரம் இங்கேயும் அடிபட்டு போய்விடும். இறுதியாகவே தமிழ்நாட்டின் அடிப்படை உரிமை. கீழணை மாநிலங்கள் அனுமதி இல்லாமல் மேலணை மாநிலங்கள் அணை கட்டிவிட முடியாது.
உதாரணத்திற்கு மகாராஷடிரா கடலில் கலந்து வீணாகுகிறதே தண்ணீர் என்று கோதாவரியில் புதிய அணை கட்ட முயன்றால் ஆந்திரா, தெலுங்கானா சும்மா விடுமா.. கிருஷ்ணா நதி நீர் ஒவ்வொரு ஆண்டும் வீணாக கடலில் கலக்கிறது.. அதனை தடுத்து விதர்பாவிற்கு பயன்படுத்த 60 டிஎம்சி தண்ணீர் கொள்ளவு உள்ள புதிய அணை கட்டி அதனை ராட்சத மோட்டார் மூலம் விதர்பாவிற்கு அனுப்புகிறோம் என்று சொன்னால் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஏற்குமா .. வாய்ப்பே இல்லை.. ஏனெனில் ஒரு நாளும் இந்த மாநிலங்கள் ஏற்க மாட்டார்கள். கடலில் வீணாக தண்ணீர் கலக்கிறது என்று கூறுவதே தவறு. இயற்கை சுழற்சி அது. மழை நீர் கடலில் கலக்காமல் போனால், கடல் நீர் ஊருக்குள் வந்துவிடும். கடல் நீரின் உப்புத்தன்மை அதிகமாகும். அதுமட்டுமல்ல மிகப்பெரிய சூழியல் பாதிப்பு ஏற்படும். காவிரி வனப்பகுதியில் 12500 ஏக்கர் வனப்பகுதியை அழித்தால், கடுமையான வெள்ளம், கடுமையான வறட்சி என்று சரி செய்யவே முடியாத பிரச்சனை தென்னிந்தியா முழுக்க ஏற்பட்டுவிடும். இயற்கையை மீறி செய்யும் எந்த விஷயத்திற்கும், அதனைவிட மிக கடுமையான விளைவுகளை மக்கள் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதே எதார்த்தமான உண்மை.


Click it and Unblock the Notifications
