ஆர்சிபி பிரபலம் மீது பெண் பரபர புகார்.. திருமணம் செய்து கொள்வதாக மோசடி! CM செல்லுக்கு போன விஷயம்
பெங்களூர்: ஆர்சிபி அணியின் முக்கிய வீரரான யாஷ் தயாள் மீது பெண் ஒருவர் சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். அதாவது தன்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டதாக அந்தப் பெண் புகாரளித்துள்ளார். முதல்வர் அலுவலகத்திற்கு அந்தப் பெண் புகார் அளித்துள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் பரபர புகாரைக் கொடுத்துள்ளார். அதாவது தன்னை திருணம் செய்து கொள்வதாகக் கூறிப் பழகிவிட்டு, ஏமாற்றிவிட்டதாக யாஷ் தயாள் மீது புகாரளித்துள்ளார்.

யாஷ் தயாள் மீது புகார்
இது தொடர்பாக அந்தப் பெண் முதலமைச்சரின் ஆன்லைன் குறைதீர் போர்ட்டலான ஐஜிஆர்எஸ் மூலமும் புகார் அளித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தப் பெண் தனது புகாரில், கடந்த ஐந்து வருடங்களாக கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், அந்தக் காலகட்டத்தில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், "எனது மனுதாரர் (அந்தப் பெண்) கடந்த ஐந்து வருடங்களாக, ஒரு கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்தார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த நபர் அவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். அந்த கிரிக்கெட் வீரர் அவரது குடும்பத்தினரிடம் நமது மருமகள் எனச் சொல்லி எனது மனுதாரரை அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாகவே எனது மனுதாரர் அவரை முழுமையாக நம்பிவிட்டார்" எனக் கூறப்பட்டுள்ளது.
துன்புறுத்தல்
மேலும், திருணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏன் ஏமாற்றுகிறீர்கள் எனக் கேட்ட போது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து புகாரில் மேலும், "ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது, புகார்தாரர் (அந்தப் பெண்) எமோஷனலாகவும் பொருளாதார ரீதியாகவும் அவரைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால், அந்த நபர் மற்ற பெண்களுடனும் இதேபோன்ற உறவுகளில் ஈடுபட்டிருப்பது அதன் பின்னரே தெரியவந்தது" என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 14ம் தேதி பெண்கள் உதவி எண் 181-ஐ தொடர்பு கொண்டதாகவும், ஆனால் இது குறித்து போலீஸ் நிலையத்தில் யாரும் புகார் எடுத்துக் கொள்ளப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் உதவியற்ற நிலையில் இருப்பதால் இப்போது முதலமைச்சர் அலுவலகத்தை அணுகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாட்கள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ கால்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
இந்த விஷயத்தை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் விசாரிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.. இந்த நடவடிக்கை அவளுக்கு மட்டுமல்ல, இதுபோன்ற உறவுகளில் சிக்கும் அனைத்துப் பெண்களுக்கும் முக்கியமானது என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பெண் இது குறித்த புகாரைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். அவரது பதிவுகள் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரியளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. அதேநேரம் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து யாஷ் தயாள் தரப்பு இதுவரை எந்தவொரு பதில் அல்லது விளக்கத்தையும் அளிக்கவில்லை.
யாஷ் தயாள்
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதில் யாஷ் தயாள் முக்கிய பங்கு வகித்தார். அவர் 15 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உள்நாட்டுப் போட்டிகளில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்காக விளையாடி வருகிறார். அவர் இன்னும் இந்திய அணியில் அறிமுகமாகவில்லை.












Click it and Unblock the Notifications