ரூ.300 மதிப்பிலான சிறப்பு பரிசு.. விராலிமலை தொகுதியில் வட்டமிடும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்!
திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வுமான விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் அந்த தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடு வீடாகச் சென்று ரூ.300 மதிப்புள்ள சிறப்புப் பரிசுப் பெட்டகங்களை விநியோகம் செய்து வருவது தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பாக களமிறங்கிய விஜயபாஸ்கர் 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்பின் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 22 எம்எல்ஏ-க்கள் தனி அணியாக செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் பலரும் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் சரண் அடைந்தனர்.

ஆனால் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்வதற்கு முன்னரும், பின்னரும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் நேற்றிரவு அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்தை சந்தித்தார். இதனால் விஜயபாஸ்கர் தவெகவில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விராலிமலை தொகுதியில் தனக்கு வாக்களித்து ஆதரவு தந்த விராலிமலை தொகுதி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பகுதியாக ரூ.300 மதிப்பிலான சிறப்பு பரிசுகள் விஜயபாஸ்கர் ஆதரவாளர்களால் அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் சூழலில், அதற்காக விஜயபாஸ்கர் இந்த பரிசுகளை வழங்குவதாக அப்பகுதியினர் பேசத் தொடங்கியுள்ளனர்.
இதற்காக தொகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்லும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் படம் அச்சிடப்பட்ட டோக்கன்கள் அல்லது நேரடியாகப் பரிசுப் பெட்டகங்களை வழங்கி வருகின்றனர். சுமார் ரூ.300 மதிப்புள்ள இந்தப் பரிசுப் பெட்டகத்தில் தினசரி குடும்பத்திற்குப் பயன்படும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியுள்ளன.
உயர்தர சமையல் பாத்திரங்கள் அல்லது எவர்சில்வர் தட்டுகள், குடும்பப் பயன்பாட்டிற்கான மளிகைப் பொருட்கள் மற்றும் முன்னாள் அமைச்சரின் வாழ்த்து மடல் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இதனால் விராலிமலை தொகுதிகளில் மீண்டும் விஜயபாஸ்கர் களமிறங்குவதற்கான பணிகளை தொடங்கி உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications