கர்நாடகாவில் மாநில அமைச்சரவை விரிவாக்கம்.. கட்சி தாவிய 10 பேருக்கு வாய்ப்பு.. எடியூரப்பா அதிரடி!
கர்நாடகாவில் பாஜக மாநில அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக மாநில அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய 10 எம்எல்ஏக்கள் உட்பட 13 பேருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மஜத - காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் 17 பேர் ராஜினாமா கடிதம் அளித்ததால் ஆட்சி கவிழ்ந்தது.

கடந்த வருடம் ஜூலை மாதம் பெரும்பான்மையை நிரூபித்த எடியூரப்பா இடைத்தேர்தலுக்கு பின் 117 எம்எல்ஏக்கள் பலத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார். அங்கு பாஜகவிற்கு மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
ஆனால் ஆட்சி அமைத்தும் கூட அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடியாமல் முதல்வர் எடியூரப்பா திணறி வந்தார். காங்கிரஸ் - மஜதவில் இருந்து பாஜகவிற்கு மாறிய உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனால் யாரை அமைச்சராக தேர்வு செய்வது என்று தெரியாமல் பாஜக தரப்பு கர்நாடகாவில் குழம்பி வந்தது. இந்த நிலையில்தான் கர்நாடகாவில் பாஜக மாநில அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய 10 எம்எல்ஏக்கள் உட்பட 13 பேருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ரமேஷ் ஜார்கிஹோலி, ஆனந்த் சிங், பிசி பாட்டீல், கே சுதாகர், நாராயண கவுடா, எஸ் டி சோமசேகர், பாரதி பசவராஜ், கோபாலையா , சிவராம் ஹெப்பார், ஸ்ரீமந் பாட்டில் ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர் பதவிகள் உள்ளது. இதில் ஏற்கனவே 18 அமைச்சர்கள் உள்ளனர். இதில் 16 அமைச்சர் பதவி காலியாக இருந்தது. தற்போது இன்று காலை 13 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
இதனால் தற்போது 3 அமைச்சர் பதவி காலியாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மகேஷ் கும்தள்ளிக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. இவருக்கு வேறு பொறுப்பு அளிக்கப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications