கன்னடர்களுக்கு பெங்களூர் ஐடி நிறுவனங்களில் வேலையில்லை.. கொந்தளித்த இளம்பெண்.. பரபரப்பான புகார்
பெங்களூர்: தாய்மொழி கன்னடம் என்று சொன்னால் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணி கிடைப்பது இல்லை. கன்னடர்களை பெங்களூர் ஐடி நிறுவனங்கள் வெளியே அனுப்பி விட்டு மாற்று மொழியினரை மட்டும் வேலைக்கு எடுப்பதாக இளம்பெண் ஒருவர் குற்றம்சாட்டிய வீடியோ தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.

இதுதொடர்பாக அந்த இளம்பெண் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் அந்த பெண் கூறியதாவது:
''வணக்கம். இந்த வீடியோவை 'ஸ்கிப்' செய்யாமல் முழுவதுமாக பாருங்கள். உங்களின் 'ரெஸ்யூம்'மில் தாய்மொழி கன்னடம் என்று கூறியிருந்தால் இண்டர்வியூவில் ரிஜெக்ட் செய்கிறார்கள் என்று நிறைய பேர் வீடியோவில் கூறியிருந்தனர்.
அது 100 சதவீதம் இல்லை 200 சதவீதம் உண்மை என ஆகியுள்ளது. 100 பேர் பணியாற்றும் நிறுவனங்களில் 3, 4 பேர் மட்டுமே கன்னடர்களாக உள்ளனர். கேம்பஸ் இண்டர்வியூக்களை நிறுவனங்கள் பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் மேற்கொள்வது இல்லை. வேறு வேறு மாநிலங்களுக்கு சென்று இண்டர்வியூ செய்து ஆட்களை கொண்டு வந்து வேலைக்கு அமர்த்துகிறார்கள்.
அவர்களுக்கு திறமை இருக்கிறதா? ஆங்கிலம் தெரிகிறதா? என்பதை பாராமல் குறைந்த சம்பளத்துக்கு வருகிறார்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக வெளிமாநிலத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்து டிரெய்னிங் கொடத்து பணியமர்த்துகிறார். கன்னடம் என்று இருந்தாலே ரிஜெக்ட் செய்கிறார்.
இதனை தொழிலாளர் நலத்துறை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்களால் முடியாது. முதல்வர் டிகே சிவக்குமார் பிடதி டவுன்ஷிப் உருவாக்கி வேலை வாங்க நினைக்கிறீர்கள். ஆனால் இப்போதைய சூழலில் உங்களால் முடியாது. இதனால் இதற்கு முதலில் தீர்வு கொடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கன்னடர்களை புறக்கணித்துவிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசுவோரை மட்டுமே ஐடி நிறுவனங்கள் அதிகமாக பெங்களூரில் பணிமர்த்துவதாக கன்னட ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது பெங்களூரில் பூதாகரமாகி உள்ளது.
இதனால் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் ஐடி நிறுவனங்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளார். இதுபற்றி கர்நாடகா முதல்வரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ''பெங்களூரு ஐடி நிறுவனங்களில் கன்னடர்கள் வேலைவாய்ப்புகளில் அநீதியை எதிர்கொள்கிறார்கள் என்ற புகார்களைக் கேட்பது வருத்தமளிக்கிறது. தாய்மொழியாக கன்னடம் பேசுபவர்கள் ஓரங்கட்டப்படும் பிரச்சினையை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
கர்நாடகாவில், கன்னடர்களே இறையாண்மை கொண்டவர்கள். எந்த காரணத்திற்காகவும் கன்னடர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதை அரசு அனுமதிக்காது. உலகம் பெங்களூருவை இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகராகபார்க்கிறது. மேலும் எங்கள் கன்னடர்களின் திறமை, திறன்களில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம் வேண்டுமென்றே கன்னடர்களை ஓரங்கட்டுவது கண்டறியப்பட்டால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கன்னடர்களின் நலன்களுக்கான குரலாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்கும் பதிலளிக்க அரசு எப்போதும் தயாராக உள்ளது'' என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
