பெட்ரோல் விலையே தாறுமாறாக உயரும்.. அப்போ தங்கம் விலை? புதிய குண்டை போட்ட ஆனந்த் சீனிவாசன்
சென்னை: புவிசார் அரசியல் இப்போது பரபரப்பாக இருக்கிறது. இஸ்ரேல், ஈரான் மோதல் மத்திய கிழக்கில் மிகப் பெரிய குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். இதற்கிடையே மத்திய கிழக்கு மோதல் சர்வதேச பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கும். இதனால் தங்கம் விலை என்னவாகும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்கிறது. தற்போதைய சூழலில் இந்த மோதல் உடனடியாக முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. இந்த மோதல் தொடரும் சூழலில், இது சர்வதேச பொருளாதாரத்தைப் பாதிக்கிறது. மேலும், தங்கம் விலையும் கூட உயரக் காரணமாக இருக்குமோ எனப் பலரும் அஞ்சுகிறார்கள்.

ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இந்த உலக அரசியலை எளிதாக விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் சமீபத்தில் கூறுகையில், "கச்சா எண்ணெய் விலை 75 டாலரை தாண்டிவிட்டது. ரூபாய் விலையும் 86.50ஐ தாண்டிவிட்டது. இதனால் விலைவாசி ஏறும். ஈரான் அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் பிரச்சினை வந்தால் 110 வரை கூட கச்சா எண்ணெய் விலை போகும். ஹார்முஸ் ஜலசந்தி என்பது மிகக் குறுகிய பாதை. அதில் இஸ்ரேல் குண்டு போட்டால் ரேட் உயரும்.
டிரம்ப் ஈரான் சரணடைய வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வருகிறார். அப்போது டிரம்ப் பங்கர் பஸ்டர் பாம்பை எடுத்து இஸ்ரேலுக்குக் கொடுக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் பதிலடி கொடுக்குமா இல்லை என்னவாகும் என்பதே இப்போது மார்க்கெட்டில் பெரிய கேள்வியாக இருக்கிறது" என்றார்.
இது முக்கியம்
அதேபோல மற்றொரு வீடியோவில் தெளிவாக விளக்கிய அவர், "அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது எனச் சொல்லிவிட்டார். மேலும், டிரம்பின் வரிகளால் விலைவாசி உயர்வது போலத் தெரிவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இருந்தாலும் இந்தாண்டு இரண்டு முறை வட்டியைக் குறைக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வட்டியைக் குறைக்கலாம்.
ஆனால், அதற்குள் பணவீக்கம் வந்துவிட்டால் அதற்கும் வாய்ப்பில்லை. அடுத்தாண்டு அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும்+ வளர்ச்சி இருக்காது என்ற நிலையை அடையலாம் என்றும் எச்சரிக்கிறார். அடுத்து இஸ்ரேல் ஈரான் போரால் சர்வதேச சந்தையில் நான் எதிர்பார்த்த அளவுக்குத் தங்கம் விலை உயரவில்லை. ஆனால், இங்கு நமது ரூபாய் மதிப்பு சரிவதால் தங்கம் விலை அவ்வப்போது மட்டும் உயர்ந்து வருகிறது.
டிரம்ப்
ஈரான் மீது குண்டு போடுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டால் நான் செய்யலாம்.. செய்யாமலும் போகலாம்.. நான் என்ன செய்வேன் என எனக்கே தெரியாது எனக் கூறியிருக்கிறார். டிரம்ப் நினைத்து நினைத்து நடவடிக்கை எடுத்து வருகிறார். டிரம்ப் குண்டு போட்டால் கச்சா எண்ணெய் விலை ஏறும். குண்டு போடாவிட்டால் கச்சா எண்ணெய் விலை ஏறாது. அவர் என்ன செய்யவார் எனக் கணிப்பது கஷ்டம்" என்றார்.
என்ன நடக்கும்!
அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த இஸ்ரேல் ஈரான் மோதலை பொறுத்தே சர்வதேச பொருளாதாரமும் தங்கம் விலையும் இருக்கும். இந்த மோதல் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் உயர்ந்து, பொருளாதாரம் சிக்கலாம், தங்கம் உயரும். மோதல் சீக்கிரம் முடிந்துவிட்டால் இந்த சிக்கல்கள் எதுவும் ஏற்படாது. இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன செய்கிறார் என்பதும் முக்கியம். ஆனால், அவர் எப்போது என்ன செய்வார் என்பதை அவருக்கு நெருக்கமானவர்களாலேயே கணிக்க முடியாது என்பதால் அதிலும் நிலையற்றதன்மையே இருக்கிறது
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications