ஆட்டுக்கறியை ‘மட்டன்’ என சொல்வது ஏன் தெரியுமா? அடடா இவ்வளவு நாள் தெரியாம போச்சே.. சுவாரசியம்
சென்னை: இன்று ஞாயிற்றுக்கிழமை.. பெரும்பாலானவர்களின் வீடுகளில் அசைவ உணவு தயாராகலாம். குறிப்பாக 'மட்டன்' வீட்டில் கொதிக்கலாம். பலரின் 'பேவரைட்'டாக இருக்கும் ஆட்டிறைச்சிக்கு எப்படி 'மட்டன்' என்ற பெயர் வந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
ஒரு காலத்தில் ஏதேனும் விசேஷ நாட்களில் மட்டும் வீட்டில் 'மட்டன்', 'சிக்கன்' எடுத்து சமைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது நினைத்த உடன் அசைவ உணவு வாங்கி சாப்பிடுவது கிராமம் முதல் நகரம் வரை வந்துவிட்டது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை என்றால் 'மட்டன்', 'சிக்கன்', 'மீன்' உள்பட பிற அசைவ உணவுகளில் ஒன்று தான் என்ற நிலை பல வீடுகளிலும் வந்துவிட்டது.

இப்படி நாம் ருசித்து உண்ணும் இந்த ஆட்டிறைச்சியை 'மட்டன்' என்று அழைப்பது ஏன்? பெயர் காரணத்தின் பின்னணி என்ன? என்பது பற்றி என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? என்று சிந்தித்து பார்த்தால் பலரது பதிலும் இல்லை என்பதாக தான் இருக்கும். அப்படியான பதிலை இப்போது மனதில் சொல்லி கொள்ளுங்கள் உங்களுக்கு இந்த செய்தியில் விடையை தருகிறோம்.
'மட்டன்' (Mutton) என்ற சொல் 'மொட்டோன்' (Moton அல்லது Mouton) என்ற பழைய பிரெஞ்சு வார்த்தையில் இருந்து உருவானது. இதற்கு உண்மையில் 'செம்மறி ஆடு' என்று பொருள். அதன்பிறகு தான் இந்த வார்த்தை இங்கிலாந்துக்குள் நுழைந்தது. கி.பி 1066-ல் நார்மானியர்கள் இங்கிலாந்தை கைப்பற்றிய பிறகு ஆங்கிலத்தில் பிரெஞ்சு மொழி அதிகமாக கலந்தது. இதனால் 'மட்டன்' என்ற சொல் இங்கிலாந்தில் பயன்பாட்டில் வந்ததோடு அது 'செம்மறி ஆட்டு' இறைச்சியை இன்று வரை குறிக்கிறது.
சரி இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். 'மட்டன்' என்றால் அது செம்மறியாட்டு கறி என்றால் வெள்ளாட்டு கறிக்கு என்ன பெயர்? என்று நீங்கள் கேட்கலாம். வெள்ளாட்டு இறைச்சிக்கு 'செவோன்' (Chevon) என்று பெயர் உள்ளது. அதேபோல் குட்டி வெள்ளாடு இறைச்சிக்கு 'காப்ரிட்டோ' (Cabrito) என்ற பெயர் உள்ளது. இதுவும் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது தான். ஆனால் இந்த வார்த்தைகள் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. அனைத்து நாடுகளிலும் வெள்ளாட்டு இறைச்சியை 'Goat Meat' என்று சொல்லும் வழக்கம் இருந்ததால் 'செவோன், காப்ரிட்டோ என்ற 2 வார்த்தைகளும் பிரபலம் அடையவில்லை.
அதேவேளையில் 'மட்டன்' என்ற சொல் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு இறைச்சியை குறிக்கும். பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒவ்வொரு ஆட்டுக்கறிக்கும் வெவ்வேறு பொருள் உள்ளது. இந்த நாடுகளில் முதிர்ந்த செம்மறியாட்டின் இறைச்சியை 'மட்டன்' என்பார்கள். இளம் செம்மறியாட்டின் இறைச்சி 'லேம்ப்' (Lamb) என்றும், வெள்ளாட்டு இறைச்சியை 'கோட் மீட்' (Goat meat) என்று அழைப்பார்கள். இதனால் பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 'மட்டன்' என்று கறிக்கடையில் கேட்டால் செம்மறியாட்டின் கறியும், உணவகங்களில் 'மட்டன்' உணவு என்று கேட்டால் செம்மறியாட்டின் இறைச்சி கறியை தான் தருவார்கள்.
அதேவேளையில், ஐரோப்பாவிற்கு வெளியே சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் 'மட்டன்' என்ற சொல் வெள்ளாட்டு இறைச்சியை குறிக்க பயன்படுத்தப்பட்டது. இது அப்படியே ஆங்கிலேயே படையெடுப்பின்போது நம் நாட்டுக்கும் பரவியது. நம் நாட்டில் செம்மறியாடுகளை விட வெள்ளாடு தான் அதிகம் வளர்க்கப்படுகிறது. செம்மறியாட்டை ஒப்பிடும்போது வெள்ளாடு வளர்ப்பது மிகவும் எளிது. அதேபோல் பெரும்பாலான மக்கள் வெள்ளாட்டு இறைச்சியை தான் அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பிட்ட மக்கள் தான் செம்மறியாட்டு இறைச்சியை விரும்பி சுவைக்கிறார்கள். இதனால் ஆங்கிலேயர் காலத்தில் நம் நாட்டில் எளிதாகவும், அதிகமாக கிடைக்கும் வெள்ளாட்டு கறியை குறிக்க 'மட்டன்'என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
இதனால் தான் நம் நாட்டில் மட்டன் கறி, மட்டன் பிரியாணி அல்லது மட்டன் ரோகன் ஜோஷ் போன்ற உணவுகள் பொதுவாக வெள்ளாட்டு கறியை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. அதன்பிறகு காலப்போக்கில் வெள்ளாட்டு கறி மட்டுமின்றி செம்மறியாட்டு கறியையும் குறிக்க 'மட்டன்' பயன்படுத்தப்பட்டது. இதனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு சென்றாலும் 'மட்டன்' என்று கேட்டால் உடனடியாக அவர்கள் ஆட்டிறைச்சியை தான் தருவார்கள். பெரும்பாலும் இது வெள்ளாட்டு கறியாக இருக்கும். செம்மறியாட்டு கறி வேண்டும் என்றால் அதனை குறிப்பிட்டு வாங்கி கொள்ள வேண்டுடும். இதனால் நம் நாட்டில் 'மட்டன்' என்ற சொல்லில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் வெளிநாடு செல்லும்போது அதன் வேறுபாடுகளை அறிந்து வைத்து கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications