தடுமாறும் தங்கம் விலை.. தாங்கி பிடிக்க போவது எது? எல்லாமே சொல்லி வைத்தது போல ஒரு மாதிரி குழப்புதே
சென்னை: தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தாறுமாறாக உயர்ந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாகவே தங்கம் விலை பெரிய ஏற்றம் இல்லாமலேயே இருந்து வருகிறது. தங்கம் விலை ஏன் இதுபோல இருக்கிறது.. இனி தங்கம் விலை ஏறுமா இல்லை குறையுமா.. ஏன் தங்கம் விலை இப்படி ஊசலாடுகிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் தங்கம் என்பதே முக்கியமான சேமிப்பாக இருக்கிறது. இதன் காரணமாகவே ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் தங்கத்தை முதல் சேமிப்பாக வாங்குகிறார்கள். இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்த நிலையில், மக்கள் இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

தங்கம் விலை
அதேநேரம் கடந்த 10 நாட்களாகத் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமலேயே இருக்கிறது. இரண்டு நாட்கள் உயர்ந்தால் இரண்டு நாட்கள் சரிவது எனத் தங்கம் விலை மாறி மாறியே இருந்து வருகிறது. தங்கச் சந்தையில் இப்போது மிகப் பெரிய குழப்பம் நிலவி வருவதையே இது காட்டுகிறது..
தங்கத்தை என்ன செய்யலாம் என்பதில் முதலீட்டாளர்கள் தெளிவு இல்லாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். புவிசார் மோதல்கள், அமெரிக்கச் சீன வர்த்தக பேச்சுவார்த்தை ஆகியவை தங்கச் சந்தையில் ஒரு வித குழப்பத்தை உருவாக்கியுள்ளது.. தங்கம் விலை எப்படி இருக்கும்.. இப்போது பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பாசிட்டிவ் விஷயம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இஷ்டத்திற்கு வரி விதித்ததே கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலை உயரப் பறக்கப் பிரதான காரணமாக இருந்துள்ளது. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியம் மீதான 50% வரியை டிரம்ப் ஜூலை 9ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் அவகாசம் கோரியதைத் தொடர்ந்து டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்திற்கான தேவை குறைந்தது, அதன் விலையும் இரு வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தது.
குழப்பம்
இருப்பினும், இதர புவிசார் அரசியல் குழப்பங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குறிப்பாக ரஷ்யா மீது உக்ரைன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. அதேபோல காசாவிலும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. இப்படி புவிசார் அரசியலில் ஒரு பக்கம் நல்ல செய்தியும் மற்றொரு பக்கம் கெட்ட செய்தியும் இருக்கிறது.
அமெரிக்கப் பொருளாதாரம்
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு அமெரிக்கக் கடன் பத்திரத்திற்கான வட்டி அதிகரித்து வருகிறது. இது தங்கத்திற்கான தேவையைக் குறைக்கிறது. அதேபோல அங்கு டாலர் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவும் தங்கம் விலை குறையக் காரணமாக இருக்கிறது. அதேநேரம் மறுபுறம் அங்கு டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரிக்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் விதித்த தடையை ஒரே நாளில் அந்நாட்டின் பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதுவும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கை குறியீடு அதிகரித்துள்ளது. அதேபோல பணவீக்கம் குறித்து வெளியான டேட்டாவிலும் அது எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், மறுபுறம் அமெரிக்காவின் ஜிடிபி இன்னுமே நெகடிவ்வாகவே இருக்கிறது. இதனால் அமெரிக்காவில் எங்குப் பொருளாதார வளர்ச்சி வரும் காலங்களில் மேலும் குறையுமே என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், ஜாப்ஸ் டேட்டாவிலும் வேலைவாய்ப்பு குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து என்னவாகும்!
இதுபோல புவிசார் அரசியலில் தொடங்கி அமெரிக்கப் பொருளாதாரம் வரை அனைத்திலும் பாசிட்டிவ் நெகடிவ் என இரண்டுமே இருக்கிறது. இதன் காரணமாகவே மதில் மேல் பூனையாகத் தங்கம் விலை இருக்கிறது. தங்கம் விலை அடுத்து எப்படி இருக்கும் என்பதில் இரு விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும். முதலில் ரஷ்யா உக்ரைன் மோதல் வெடித்துள்ள நிலையில், அது எப்படிப் போகும் என்பது முக்கியம்.
அதேபோல அடுத்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீட்டிங் நடக்கிறது. அதில் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பதும் முக்கியம். இந்த இரண்டையும் வைத்தே தங்கம் விலை தீர்மானிக்கப்படும். அதுவரை தங்கம் விலை பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications