Gold Rate:"டிரம்ப் பேச்சு + ரூபாய் மதிப்பு சரிவு.." தங்கம் விலை இனி குறைய வாய்ப்பே இல்லை- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் இப்போது தங்கத்தை வாங்கலாமா.. இல்லை காத்திருந்து சரிந்த பிறகு வாங்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது குறித்து விளக்கியுள்ளார். தற்போதைய சூழலில் தங்கத்தை வாங்குவது சரியாக இருக்குமா என்பது குறித்து அவர் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு ரெக்கார்டு படைத்து வருகிறது என்றே சொல்லலாம்.

தங்கம் விலை:
நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7944க்கு விற்பனையானது. 244 கேரட் தங்கம் ஏற்கனவே ரூ.8666க்கு போய்விட்டது. இந்தளவுக்குத் தங்கம் விலை உயர்ந்துவிட்ட நிலையில், இது வரும் காலங்களில் குறையுமா இல்லை தொடர்ந்து உயரவே செய்யுமா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்:
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் யூடியூப் சேனலில், "தங்கம் எகிறி எங்கேயோ போய்விட்டது. தங்கம் விலை ராக்கெட்டில் ஏறும் எனச் சொல்வேன். ஆனால், இப்போது இருக்கும் நிலையை வைத்துப் பார்த்தால் ராக்கெட்டை விட வேகமாக எதாவது இருந்தால் அதைச் சொல்லலாம். 22 கேரட் தங்கமே கிட்டதட்ட ரூ.7900+ வரி என்று இருக்கிறது. வரியைச் சேர்த்தால் 22 கேரட் தங்கமே கிட்டதட்ட ரூ.8200 வரை போய்விட்டது. தங்கத்தை காயினாக வாங்க வேண்டும் என்றாலே ரூ.8500 கிட்ட வந்துவிடும். தங்கம் நமது முதல் டார்கெட்டை அடைந்துவிட்டது என்றே சொல்லலாம்.
சீக்கிரம் ஒரு ரூ.350 வரை கூட உயரலாம். இதன் மூலம் வரி எதுவும் இல்லாமலேயே ரூ.8250க்கு 22 கேரட் தங்கம் போகலாம்.. அதேநேரம் இப்போதே மேக்கிங் சார்ஜ் எல்லாம் போட்டால் ரூ.9000 கிட்ட போய்விட்டது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8500ஐ தாண்டிவிட்டது. தங்க காயினாக வாங்க வேண்டும் என்றால் இப்போதே ரூ.9000ஐ தர வேண்டும்.
உயரவே செய்யும்:
இன்னொரு நற்செய்தி இருக்கிறது. தங்கம் விலை வரும் காலத்தில் உயரவே செய்யும். அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது. அதைக் குறைக்கத் தொடங்கும் போது, அதாவது வட்டி விகிதம் ரிவர்ஸ் கியருக்கு போகும் போது தங்கம் டாப் கியரில் மேலே போகும்.
காரணம் டிரம்ப்:
டிரம்ப் காரணமாகவே இப்போது தங்கம் விலை உயர்ந்து வருகிறது. காசா கைபற்றி டெவலப் செய்வேன் என்கிறார். அதில் லாஜிக்கே இல்லை. பணமா கால்வாயை வாங்குவேன், க்ரீன்லாந்தை வாங்குவேன் என்று பேசி வருகிறார். ஏதோ அந்த காலத்து ராஜா மாதிரி பேசி வருகிறார். புதினுக்கு சரியான ஆள் தான். இது எந்தளவுக்கு மோசமாகப் போகும் எனத் தெரியவில்லை.
ஏற்கனவே டிரம்பால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் ஆரம்பித்துவிட்டது. வேறு யார் உடன் எல்லாம் அவர் சண்டை போடப் போகிறார் எனத் தெரியவில்லை" என்றார்.
ரூபாய் மதிப்பு:
அதேபோல மற்றொரு வீடியோவில், "அமெரிக்காவில் தற்போது பொருளாதாரம் நல்ல நிலையில் தான் இருக்கிறது. இதனால் அடுத்த முறை அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு குறைவு. இதனால் ரூபாய் மதிப்பு கிடுகிடுவென சரியும். இந்தாண்டு இறுதிக்குள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.92 முதல் ரூ.95 வரை கூட செல்லலாம்" என்றார். அதாவது ரூபாய் மதிப்பு சரியும் போது, தங்கம் விலை உயரும். சர்வதேச சந்தையில் தங்கம் உயரவில்லை என்றாலும் ரூபாய் மதிப்பு சரிவதால் இந்தியாவில் தங்கம் விலை உயரும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications