வெள்ளி எல்லாம் வேலைக்கு ஆகாது.. லாபத்தை அள்ளி கொடுக்க போகும் தங்கம்.. விலை இன்னும் 36% ஏறுமாம்!
வாஷிங்டன்: தங்கம் வெள்ளி முதலீடுகள் குறித்து இப்போது பலரும் பேசி வரும் நிலையில், பிரபலச் சர்வதேச முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. வெள்ளியை விடத் தங்கமே அதிக லாபம் தரும் என்று கூறியுள்ள கோல்ட்மேன் சாக்ஸ் வரும் காலத்தில் தங்கம் விலை எந்தளவுக்கு உயரும் என்பது குறித்தும் முக்கிய கணிப்புகளைப் பகிர்ந்துள்ளது.
கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. குறிப்பாகக் கடந்த மாதம் வரலாறு காணாத அளவுக்குத் தங்கம் விலை உச்சம் தொட்டது. இது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் வெள்ளி விலையும் கணிசமாக உயர்கிறது. இதனால் தங்கத்தை போலவே வெள்ளியிலும் முதலீடு செய்யலாம் என்று பலரும் யோசித்து வருகிறார்கள். சிலர் முதலீடு செய்யவும் தொடங்கிவிட்டனர்.

வெள்ளி வேலைக்கு ஆகாது
இருப்பினும், வெள்ளியை விடத் தங்கமே தொடர்ந்து சிறந்த லாபத்தைத் தரும் என்று பிரபல சர்வதேச முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பதே தங்கம்-வெள்ளி விகிதம் அதிகமாக இருக்கவும் காரணமாக இருப்பதாக கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
தங்கம் வெள்ளி விகிதம்
ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்க எவ்வளவு அவுன்ஸ் வெள்ளி தேவை என்பதே தங்கம்-வெள்ளி விகிதம் என்று அழைக்கப்படும். இது கடந்த நூற்றாண்டில் 20க்கும் குறைவாக இருந்தது. பிறகு மெல்ல அதிகரித்துக் கடந்த ஆண்டு 84.7ஆக இருந்தது. இப்போது இது 102ஆக உயர்ந்துள்ளது. அதாவது 102 அவுன்ஸ் வெள்ளியைக் கொடுத்தால் மட்டுமே இப்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்க முடியும் என்ற சூழல் இருக்கிறது.
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தையே பாதுகாப்பான முதலீடாக வாங்கி குவித்து வருகிறது. இதனால் தற்போதைய சூழலில் தங்கத்தின் அளவுக்கு வெள்ளியின் விலை அதிகரிக்க வாய்ப்பே இல்லை என்று கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ்
இது தொடர்பாக கோல்ட்மேன் சாக்ஸ் மேலும் கூறுகையில், "சீனா சோலார் திட்டங்கள் குறைந்து வருகிறது.. மேலும் பொருளாதார மந்தநிலை ஆபத்தும் அதிகரிக்கிறது.. முக்கியமாக 2025ல் உலகின் பல்வேறு மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இதனால் வெள்ளியை விட தங்கம் அதிக லாபத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம் தங்கம்- வெள்ளி இடையேயான வலுவான தொடர்பு இருப்பதால் வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு உயரும்
இந்தாண்டு தொடக்கம் முதல் ஸ்பாட் தங்கம் 26%க்கும் உயர்ந்துள்ளது. குறிப்பாகக் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு அவுன்ஸ் $3,500.05 என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது. புவிசார் அரசியல் குழப்பங்கள், தங்க முதலீட்டில் அதிகரிக்க ஆர்வம் ஆகியவையே இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. மறுபுறம் வெள்ளி ஒரு அவுன்ஸ் இப்போது $32.4ஆக வர்த்தகமாகிறது. நடப்பாண்டில் வெள்ளி இதுவரை 12% மட்டுமே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு இறுதிக்குள் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் $3,700 ஆகவும், அடுத்தாண்டு ஜூன்- ஜூலை காலகட்டத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,000ஆகவும் அதிகரிக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. அதாவது ஓராண்டில் தங்கம் விலை சுமார் 20% வரை உயரும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
30% வரை உயரலாம்
அதேநேரம் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் தங்கம் விலை வேகமாக அதிகரிக்கத் தொடங்கும். அதுபோன்ற சூழலில் தங்கம் விலை இந்தாண்டு இறுதிக்குள்ளேயே $3,880 வரை சென்றுவிடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க பெடரல் வங்கியின் சில நடவடிக்கைகள், அமெரிக்க பாலிசி மாறினால் 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கம் விலை $4,500 டாலர் வரை கூட செல்லாமல் என்று கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது. அதாவது சுமார் 36% வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்












Click it and Unblock the Notifications