LPG சிலிண்டர் புக்கிங் குறைந்தது.. பைக்கில் பயன்படுத்தும் எத்தனால் இப்போ சமையலறையில்.. புது ஐடியா
இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகத்தில் ஈரான் போரால் ஏற்பட்டுள்ள தற்காலிக சிக்கல்களை சமாளிக்க மத்திய அரசு ஒரு முக்கியமான மாற்றத்தை பரிசீலித்து வருகிறது. இந்தியாவுக்கு தேவையான எல்பிஜி-யில் பெரும் பகுதி வெளிநாடுகளில் இருந்து தான் வருகிறது. தற்போது ஈரான் போர் காரணமாக சப்ளை குறைந்துள்ள காரணத்தால் இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை சரி செய்ய, இந்தியாவில் ஏற்கனவே உபரி உற்பத்தியில் உள்ள எத்தனால்-ஐ வணிக ரீதியான சமையலுக்கு அதாவது ஹோட்டல், கிளாவுட் கிட்சன், கல்யாண மண்டபம் போன்ற பெரிய இடங்களிலும், வணிக ரீதியாகவும் சமைக்கும் இடங்களில் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு விவாதித்து வருகிறது.

இது எல்பிஜி பயன்பாட்டை முழுமையாக மாற்றும் திட்டம் அல்ல, வணிக நிறுவனங்களுக்கு ஒரு துணை எரிபொருளாக கொண்டு வரும் திட்டமாக இருக்கப்போகிறது. இதன் மூலம் எல்பிஜி இறக்குமதியை குறைக்க முடியும். ஏற்கனவே வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 20 சதவீதம் வரையில் எத்தனால் கலப்பில் வெற்றிக்கண்டது மூலம், தற்போது எரிவாயு பயன்படுத்தும் இடத்திலும் எத்தனால்-ஐ கொண்டு வர முயற்சி செய்கிறது மத்திய அரசு.
ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எல்பிஜி பற்றாக்குறை மூலம் ஹோட்டல்கள், உணவகங்கள், விமான நிலையங்கள் போன்ற வணிக இடங்களுக்கு எல்பிஜி விநியோகம் குறைந்துள்ளது. இத்தகைய இடத்தில் எத்தனாலை மாற்று எரிபொருளாக பயன்படுத்தும் முறையை உருவாக்குவதே மத்திய அரசின் திட்டம். இது விவசாயிகளுக்கும், எத்தனால் உற்பத்தியாளர்களுக்கும் உதவும்.
இந்தியாவில் எத்தனால் உற்பத்தி திறன் தற்போது சுமார் 2,000 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்புக்கு பின்னரும் சுமார் 1,000 கோடி லிட்டர் எத்தனால் உபரியாக சந்தையில் உள்ளது. இந்த அதிகப்படியான எத்தனாலை சமையல் எரிபொருளாக பயன்படுத்த அரசு பரிசீலனை செய்து வருகிறது.
விரைவில் ஒரு விரிவான வெள்ளை அறிக்கை (வைட் பேப்பர்) மத்திய அமைச்சரவை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்தக் குழுவில் பெட்ரோலியம், சாலை போக்குவரத்து, கனரகத் தொழில்கள் மற்றும் உணவு துறை அமைச்சகங்கள் இடம்பெற்றுள்ளன.
எத்தனால் முக்கியமாக கரும்பு, மக்காச்சோளம், உடைந்த அரிசி ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படுகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எத்தனால் கலவை, வாகன எரிபொருளுக்கு பயன்படும் எத்தனாலிலிருந்து வேறுபட்டது. மேலும் இது மலிவான விலையில் கிடைக்கும் என்பது முக்கிய அம்சம். அனைத்திற்கும் மோலாக இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் வெளிநாடுகளை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. எத்தனால் பயன்படுத்தும் போது கரும்பு, மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் கூடுதல் வருமானம் பெறுவார்கள்.
மேலும் இன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மார்க்கெட்டிங் & ஆயில் ரிஃபைனரி இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, கோடை காலத்தில் எல்பிஜி தேவை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே எல்பிஜி புக்கிங் 50 லட்சத்திற்கு மேல் இருந்த நிலையில், தற்போது 46 லட்சம் முதல் 50 லட்சம் வரை மட்டுமே உள்ளது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications