ஐஆர்சிடிசி கேண்டீன்களில் ஏஐ கேமரா.. ரயில்களில் உணவு சாப்பிடுபவர்கள் அறிய வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் ஐஆர்சிடிசி என்று சுருக்கமாக அழைக்கப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தனது சமையலறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இறக்கி உள்ளது. இந்த நவீன ஏஐ தொழில்நுட்ப ஏஐ கேமராக்களை வைத்து சமையலறைகளை ஐஆர்சிடிசி அதிகாரிகள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கண்காணிக்க போகிறார்கள். இந்த கேமராக்கள், சமையலறையில் எறும்பு ஓடினால் கூட கண்டுபிடித்து விடும். அந்த அளவிற்கு துல்லியமான கேமரா என்பதால், உணவு தயாரிப்பு மேம்படும் என்றும், மிகத்தூய்மையாக உணவு தயாராகும் என்று ஐஆர்சிடிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ரயில்வே துறையில் நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. சமையலறைகள் செயல்படுகிறது. இங்கு மொத்தம் 2,394 ஏ.ஐ. வசதி கொண்ட கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

irctc canteen ai camera Immediate alert if 9 types of violations occur in train canteens

இந்த அதிநவீன கேமராக்கள், ரயில் சமையலறைகளில் சுகாதாரமற்ற சூழ்நிலைக்கு காரணமாக இருக்கும் 9 வகையான முக்கிய குறைபாடுகளை துல்லியமாகக் கண்டறியும் திறன் கொண்டவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் சமையல் கூடங்களில் ஊழியர்களின் சுகாதாரம், தூய்மை நடைமுறைகள் மற்றும் விதிமீறல்கள் ஏதேனும் நடந்தால் உடனடியாக இந்த ஏ.ஐ. கேமரா கண்டறிந்து சிக்னல் கொடுத்துவிடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஐஆர்சிடிசியின் சமையலறைகளில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ஐ. வசதி கொண்ட கேமராக்கள், எறும்பின் அளவுக்கு மிகச் சிறிய குறைபாடுகளைக்கூட எளிதாக கண்டறிந்துவிடும். இந்த கேமராக்கள் சமையல் கூடத்தில் ஒரு எறும்பு நடமாடினால் கூட (சுமார் 7-8 மி.மீ அளவிற்கு கூட ) துல்லியமாகக் கண்டறியும் திறன் கொண்டவையாக இருக்கும்.

நாடு முழுவதும் உள்ள பல சமையலறைகள் ஒரே வலையமைப்பில் இணைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த அதிநவீன கண்காணிப்பு அமைப்பு தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் முழுமையான சுகாதாரமான உணவு வழங்கப்படுவது 100 சதவீதம் உறுதி செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள ஐஆர்சிடிசி தலைமையகத்தின் பிரதான கண்காணிப்பு அறைக்கு கேண்டீன்களில் உள்ள 2,394 ஏ.ஐ. வசதி கொண்ட கேமராக்கள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஏஐ சிஸ்டம் சமையலறைகளில் நடக்கும் 9 முக்கியமான சுகாதாரக் குறைபாடுகளைக் கண்டறியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தலைக்கவசம் அணிந்துள்ளார்களா? கையுறைகள் அணிந்துள்ளனரா? சமையல் கூடத் தரை சரியாகத் துடைக்கப்படுகிறதா ?

பாத்திரங்கள் மற்றும் மேடைகள் தூய்மை செய்யப்படுகின்றனவா ? எலிகள் நடமாட்டம் உள்ளதா? ஈக்கள் மொய்க்கின்றனவா? கரையான்கள்/கரப்பான் பூச்சிகள் உள்ளனவா? ஊழியர்கள் சரியான சீருடை அணிந்துள்ளனரா?, ஏதேனும் விதிமீறல்கள் அல்லது அசுத்தமான பழக்கவழக்கங்கள் நடக்கின்றனவா? என ஏஐ கேமரா கண்காணித்து டெல்லியில் உள்ள வார் ரூமுக்கு தகவல் அனுப்பிவிடும். அவர்கள் உடனே சம்பந்தப்பட்ட கேண்டீன் மேலாளரை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வைத்துவிடுவார்கள்..

இதில் சிறப்பு என்னவென்றால், எச்சரிக்கை வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அந்தத் தவறு சரிசெய்யப்பட வேண்டும். இல்லையெனில், அந்தப் புகார் உயர் அதிகாரிகளுக்குத் தானாகவே கொண்டு செல்லப்பட்டு, சமையல் ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலவரப்படி, இந்த சிஸ்டம் மூலம் தினமும் சராசரியாக 350 எச்சரிக்கைகள் உருவாக்கப்பட்டுத் தவறுகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்திய இரயில்வேயில் கடந்த 5 ஆண்டுகளில் பயணிகளிடமிருந்து உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து 19,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி இருந்தது. ரயில்களில் வழங்கப்படும் உணவில் முடி, பூச்சிகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி ரயில்வேயின் நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ரயில்வே உணவு என்றாலே சுகாதாரமற்றது என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள். இதனை போக்கவே ஐஆர்சிடிசி இறங்கி உள்ளது.

ஐஆர்சிடிசி தற்போது நாள் ஒன்றுக்குத் தோராயமாக 18 லட்சம் உணவுகளை ரயில் பயணிகளுக்கு வழங்கி வருகிறது (ஆண்டுக்குச் சுமார் 60 கோடி உணவுகள்). இவ்வளவு பெரிய அளவில் மனிதர்களை மட்டுமே நம்பித் தரத்தைக் கண்காணிப்பது சாத்தியமற்றது என்பதால் ஏஐக்களை இறக்கி உள்ளது. அதற்கு நல்ல பலனும் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+