பெண்கள் வாங்கும் லிப்ஸ்டிக் பின்னால் இப்படியொரு கதையா? சுவாரஸ்யமான தகவல்!
பெண்கள் பயன்படுத்தும் பல்வேறு அழகு சாதன பொருட்களில் லிப்ஸ்டிக்-கிற்கு பொருளாதாரத்துடன் மிக முக்கியமான கனெக்ஷன் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்? பொருளாதாரம் மந்தமாக இருக்கும் காலங்களில் மக்கள் பெரிய செலவுகளை, குறிப்பாக ஆடம்பர செலவுகளை குறைத்துவிடுவார்கள்.
ஆனால், ஒரு விசித்திரமான நடைமுறை என்னவென்றால் இந்த நேரத்தில் லிப்ஸ்டிக் விற்பனை அதிகரிக்கும் என்பது தான். பொருளாதாரத்தில் ரெசிஷன் வரும் போது வருமானம் குறைந்து, வேலைவாய்ப்பு பாதிப்பு ஏற்பட்டு கடுமையான வர்த்தக சூழ்நிலை நிலவும் வேளையில் லிப்ஸ்டிக் விற்பனை ஏன் உயர்கிறது என்பது தான் முக்கியமான கேள்வி.

லிப்ஸ்டிக் எஃபெக்ட் என்றால் என்ன?
கடினமான பொருளாதார காலத்தில் மக்கள் பெரிய செலவுகளை (கார், வீடு, விலையுயர்ந்த பேக்) தவிர்த்தாலும், தங்களை மகிழ்விக்கும் சிறிய, மலிவான ஆடம்பரப் பொருட்களை வாங்குவார்கள். இது அவர்களுக்கு உணர்வு பூர்வமான திருப்தியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. லிப்ஸ்டிக் அதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இதை தான் லிப்ஸ்டிக் எஃபெக்ட் என கூறப்படுகிறது.
எப்படி இந்தப் பெயர் வந்தது?
2001-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது, எஸ்தீ லாடர் நிறுவனத்தின் தலைவர் லியோனார்ட் லாடர் இந்த நிகழ்வை கவனித்தார். பொருளாதாரம் மோசமாக இருந்தபோதும், காஸ்ட்லியான ஆடம்பர பொருட்களை மக்கள் வாங்க முடியாத நிலையில் விலையுயர்ந்த லிப்ஸ்டிக்களின் விற்பனை அதிகரித்ததை அவர் கண்டார். அப்போதுதான் "லிப்ஸ்டிக் எஃபெக்ட்" என்ற சொல் உருவானது, பிரபலமானது.
மக்களின் மனநிலை
பணம் பற்றாக்குறை இருக்கும்போது மக்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கிறார்கள். ஆனால், தங்களை சந்தோஷப்படுத்திக்கொள்ளும் உணர்வு குறையாது. குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகமாக இருக்கும். அந்த ஆசையை சிறிய, மலிவான பொருட்களின் மூலம் நிறைவேற்றுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக் வாங்குவதற்கு பதிலாக, ரூ.2,000 அல்லது ரூ.3,000க்கு ஒரு நல்ல லிப்ஸ்டிக் அல்லது ஸ்கின் கேர் பொருளை வாங்குகிறார்கள். இது அவர்களுக்கு நம்பிக்கையையும், "நான் இன்னும் நன்றாக இருக்கிறேன்" என்ற உணர்வையும் தருகிறது. இந்த தொகையின் அளவு ஒவ்வொரு நபருக்கும் மாறுப்படும்.
லிப்ஸ்டிக் மட்டுமல்ல
இதேபோன்ற செயல்முறை அழகு சாதனங்கள் மட்டும் அல்ல. உயர்தர சாக்லேட், சிறிய நகை, நல்ல உடை, அல்லது வெளியே சாப்பிடும் சிறிய உணவு வரை நீண்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் தங்களை மகிழ்விப்பதற்கான சிறிய வழிகளைத் தேடுகிறார்கள்.
இந்தியாவிலும் இதே கதை
கொரோனா தொற்று காலத்தில் லாக்டவுன் நடைமுறையில் இருந்த நேரத்தில் இந்தியாவில் எப்போதும் இல்லாமல் அழகு சாதன பொருட்கள் (குறிப்பாக கண் சார்ந்த பொருட்கள்), பேங்கிங் பொருட்கள், ஹோம் தியேட்டர், பெரிய சைஸ் டிவி, பிளேஸ்டேஷன் ஆகியவை அதிகளவில் விற்பனையானது. பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்தும் முடங்கிய நிலையில் மக்கள் சில காஸ்ட்லியான பொருட்களை தேடி தேடி வாங்கினர்.
வர்த்தக சந்தைக்கு என்ன பாதிப்பு?
இந்த "லிப்ஸ்டிக் எஃபெக்ட்" வியாபார உலகுக்கு முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. மிக உயர்ந்த விலையில் மட்டும் பொருட்களை விற்பவர்கள் கடின காலத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தை இழந்தனர். ஆனால், நியாயமான விலையில் ஆடம்பர உணர்வை தரும் பொருட்களை விற்பவர்கள் விற்பனையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும், மக்களின் ஆசைகள் முழுமையாக மறைவதில்லை. அவை வெறுமனே மாறுபாடு அடைகின்றன. பெரிய செலவுகளை குறைத்துவிட்டு, சிறிய மகிழ்ச்சிகளை நோக்கி திரும்புகிறார்கள். இதுதான் லிப்ஸ்டிக் தியரி அல்லது லிப்ஸ்டிக் எபெக்ட்.












Click it and Unblock the Notifications