இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மாதம் ரூ.350 ஆக உயரணும்.. ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் பேட்டி
டெல்லி: இந்தியாவில் மொபைல் சேவைகளுக்கான கட்டணம் ஒரு பயனருக்கு மாதம் சராசரியாக ரூ.350 ஆக உயர வேண்டும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் கூறியுள்ளார். தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய தேவையுடன் ஒப்பிடும்போது தற்போதைய கட்டணங்கள் மிகவும் குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதாகவும் ஏர்டெல் நிறுவனர் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், செல்போன் கட்டணத்தை எப்போது ரூ.350 ஆக உயர்த்த வேண்டும் என்பதற்கு அவர் எந்தக் காலக்கெடுவையும் கூறவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்.

பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டியில் மேலும் அவர் கூறுகையில், "இதற்கு முன்பு ஒரு மொபைல் பயனரிடம் இருந்து மாதம் சராசரியாக ரூ.300 வருவாய் கிடைப்பதுதான் சரியான கட்டண நிலை என்று கூறி வந்தேன். ஆனால், அந்தக் கணக்கு 10 ஆண்டுகளுக்கு முந்தையது. அதன்பிறகு பணவீக்கமும் அதிகரித்துள்ளது" என்றார்.
மொபைல் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன?
மொபைல் கட்டணத்தை உயர்த்துவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன.
1. அதிகரிக்கும் செயல்பாட்டுச் செலவுகள்
எண்ணெய் விலை, மின்சாரக் கட்டணம், ஊழியர்களுக்கான செலவுகள், நிர்வாகச் செலவுகள் என அனைத்தும் அதிகரித்துள்ளன.
2. தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டிய தேவை
இந்தியாவில் தற்போது சுமார் 3.5 லட்சம் மொபைல் டவர்கள் உள்ளன. ஆனால், சீனாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான டவர்கள் உள்ளன. எனவே, இந்தியாவில் தற்போதுள்ள டவர்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் இரு மடங்காக அதிகரிக்க வேண்டும். கூடுதலாக ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் மற்றும் கடலுக்கு அடியில் செல்லும் தொலைத்தொடர்பு கேபிள்களையும் அமைக்க வேண்டும். இதற்குப் பெரிய அளவில் முதலீடுகள் தேவைப்படுகின்றன.
5ஜி சேவைக்கு பல லட்சம் கோடி முதலீடு!
இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கெனவே பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. ஸ்பெக்ட்ரம் வாங்குவதற்காகவே நிறுவனங்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. நெட்வொர்க் கட்டமைப்பை உருவாக்க மேலும் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளன.
ஆனால், 5ஜி சேவை மூலம் எதிர்பார்த்த அளவுக்குப் புதிய வருவாய் கிடைக்கவில்லை. இது ஓரளவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், எதிர்கால டிஜிட்டல் சேவைகளுக்குத் தேவையான கட்டமைப்பை 5ஜி உருவாக்கியுள்ளது.
மாதம் ரூ.350 கட்டணம் என்பது அதிகமா?
இந்தியாவில் மாதம் சராசரியாக ரூ.350 மொபைல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தொலைத்தொடர்புக் கட்டணங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதில் ரூ.200-க்கும் அதிகமான அடிப்படை ரீசார்ஜ் திட்டங்களும், ரூ.500, ரூ.700, ரூ.800 மற்றும் ரூ.1,000 வரையிலான உயர்தரத் திட்டங்களும் அடங்கும்.
இதைக் கணக்கிட்டால் ஒரு நாளைக்கு ரூ.10 முதல் ரூ.12 வரைதான் செலவாகும்.
"இப்போது குளியல் சோப்பு, நொறுக்குத் தீனிகளான சிப்ஸ் பாக்கெட் வாங்கினால்கூட அதன் விலை எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு பெப்சி பாட்டிலுக்குக்கூட அதைவிட அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு நாளைக்கு ரூ.10 முதல் ரூ.12 செலவழிப்பதன் மூலம் வங்கிச் சேவைகள், கல்வி, அரசு நலத்திட்டப் பணப் பரிமாற்றங்கள், யுபிஐ பரிவர்த்தனைகள், மருத்துவப் பதிவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்த முடிகிறது. அதுமட்டுமின்றி திரைப்படங்கள், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றையும் பார்க்க முடிகிறது" என்று சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
ஏர்டெல் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு?
சுனில் மிட்டல் இவ்வளவு கூறுகிறாரே, ஏர்டெல் நிறுவனம் சராசரியாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது, எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.
ஏர்டெல் நிறுவனத்தின் அறிக்கையின்படி, கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒரு மொபைல் பயனரிடமிருந்து மாத சராசரியாக ரூ.271 வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.256 ஆக இருந்தது.
தற்போது கிடைக்கும் ரூ.271 சராசரி வருவாயிலிருந்து ரூ.350 ஆக உயர்ந்தால், சுமார் 29 சதவீதம் வருவாய் அதிகரிக்கும்.
கடைசியாக எப்போது மொபைல் கட்டணம் உயர்த்தப்பட்டது?
இந்தியாவில் கடைசியாக 2024 ஜூன் மாதம் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் 10 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை மூன்று முறைதான் முக்கியமான அளவில் மொபைல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மொபைல் சேவைக் கட்டணங்களும், ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயும் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மீண்டும் கட்டண உயர்வு வரும் என்று சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 2026 இறுதியில் கட்டண உயர்வு இருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு என்ன லாபம்?
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு மாதாந்திர ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்தால், அவற்றின் வருவாய் அதிகரிக்கும். ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டலின் பேச்சைப் பார்க்கும்போது, கட்டண உயர்வுக்கு ஏர்டெல் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.
வோடஃபோன் ஐடியா நிறுவனத்தைப் பொறுத்தவரை, அது நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே, மிட்டல் கூறுவதைப் போல கட்டண உயர்வு அந்த நிறுவனத்துக்கு முக்கியமானதாக இருக்கும். 2027 முதல் 2030 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் வோடஃபோன் ஐடியா தனது சட்டப்பூர்வ நிலுவைத் தொகைகளைச் செலுத்த, ஒட்டுமொத்தமாக சுமார் 45 சதவீத கட்டண உயர்வு தேவைப்படும் என்று ஜெஃப்ரீஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் மூன்று வலுவான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்றுதான் தான் விரும்புவதாக சுனில் மிட்டல் ஏற்கெனவே கூறியுள்ளார். இதில் வோடஃபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் மிகவும் சவாலான சூழ்நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்டண உயர்வால் மாறும் வாடிக்கையாளர்கள்!
2024 ஜூலை மாதத்தில் மொபைல் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பிறகு, ஜியோ நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 1.274 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
மீண்டும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத் திட்டங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் மீண்டும் 12-க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்ட காலகட்டத்துக்குத் திரும்பக்கூடாது என்றும் சுனில் மிட்டல் பேட்டியின்போது கூறினார். அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இருந்தபோது அவற்றின் நிதிநிலை பலவீனமாக இருந்ததாகவும், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பில் போதிய முதலீடுகள் செய்யப்படவில்லை என்றும் மிட்டல் சுட்டிக்காட்டினார்.
தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது நெட்வொர்க் திறனில் 20 முதல் 30 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துவதாகவும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI), ஃபைபர் நெட்வொர்க், மொபைல் டவர்கள், செயற்கைக்கோள் இணைப்புகள் போன்றவற்றுக்கான புதிய முதலீடுகள் தேவைப்படும் என்றும் மிட்டல் குறிப்பிட்டார்.
பார்தி டெலிகாமில் 50 சதவீத பங்குகளை உயர்த்தத் திட்டம்!
அதேபோல், பங்குகள் குறித்துப் பேசும்போது, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் பார்தி டெலிகாமில் (Bharti Telecom) தங்களது பங்குகளை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் 50 சதவீதத்துக்கு மேல் செல்வோம். தற்போது எங்களிடம் 40 சதவீத பங்குகள் உள்ளன. நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கு கூடுதல் பங்குகள் அவசியம்" என்று பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, இந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவோம் என்றும் மிட்டல் கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
