தென்மேற்கு பருவமழை தீவிரம் குஜராத்தில் வெள்ளம்... 45 பேர் பலி
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அம்ரெலி மாவட்டம் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இங்கு மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும் நேற்றிலிருந்து குஜராத்தில் கனமழை பெய்து வருகிறது.
தெற்கு குஜராத் மற்றும் சௌராஷ்டிரா கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அகமதாபாத், சூரத், ராஜ்கோட், பவ்னாநகர் மற்றும் அம்ரேலி மாவட்டம் மழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

45 பேர் பலி
அம்ரெலியில் உள்ள பாகசாரா என்ற இடத்தில் அதிகபட்சமாக சுமார் 63 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இங்கு மட்டும் 36 பேர் பலியாகியுள்ளனர். இங்குள்ள நானி வகனியா கிராமத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். பாவ் நகரில் 2 பேர், சூரத்தில் 3 பேர் என மழை வெள்ளத்திற்கு இதுவரை 45 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரைபுரண்ட வெள்ளம்
கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 30 கிராமங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் இந்திய ராணுவப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
55 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. பவ்னாநகர், சூரத், ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
48 மணிநேரத்தில் மழை
இதனிடையே இந்த வார இறுதியில் வட இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பருவமழையால் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள மாநிலங்கள் பயன்பெறும். இந்த பருவமழை வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வடமாநிலங்களில்
தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்தவார இறுதிக்குள் பருவமழை தொடங்க உள்ளது. குறைந்த காற்றழுத்தம் காரணமாக குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வட மாநிலங்களில் மழை பெய்யும். மேற்கு இமயமலைப் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications