ஆர்பிஐ பம்பர் கிப்ட்.. EMI சர்ருனு குறையும்! ஆனா "இவங்களுக்கு" மட்டும் வட்டி ஒரு ரூபாய் கூட குறையாது
டெல்லி: புதிய வீடு அல்லது கார் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை ரிசர்வ் வங்கி கொடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 6% லிருந்து 5.5% ஆகக் குறைத்துள்ளது. இதன் மூலம் வட்டி குறைந்து, இஎம்ஐ குறையும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கடந்த 3 நாட்களாக நடந்த கொள்கைக் குழுக் கூட்டத்தின் இறுதி நாளான இன்று இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கணக்கிட்டால் வட்டி விகிதம் குறைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

காரணம் என்ன
குறைந்து வரும் பணவீக்கம் மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை காரணமாக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நுகர்வோர் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பை நெருங்குவதாலும், உலகளாவிய நிச்சயமற்ற நிலைகள் அதிகரிப்பதாலும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கடன் வாங்குபவர்களுக்கு இதனால் என்ன லாபம்?
ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குக் கடன் கொடுக்கும் வட்டி விகிதமாகும். இது குறையும்போது, வங்கிகள் பெரும்பாலும் மக்களுக்குக் கொடுத்திருக்கும் கடன் விகிதங்களைக் குறைக்கும். அதாவது மக்கள் செலுத்தும் கடனுக்காக வட்டி விகிதம் குறையும். வீட்டுக் கடன்கள், கார் கடன்கள் மற்றும் பிற தனிநபர் கடன்கள் குறைந்து, இஎம்ஐ தொகையும் குறையும்.. அதாவது கடன் வாங்குபவர்களுக்கு வட்டிச் சுமை குறையும்.
குறிப்பாக வீட்டுக் கடனுக்குப் பலரும் ஒவ்வொரு மாதாமாதம் அதிகபட்ச தொகையை இஎம்ஐ ஆகச் செலுத்த வேண்டி இருக்கும் நிலையில், இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.. குறிப்பாக முதல் முறை வாங்குபவர்களுக்கு இது உதவியாக இருக்கும். வட்டி விகிதம் குறைவதால் வீடு வாங்கத் திட்டமிட்டு இருப்போரும் கூட இப்போது விரைந்து வீடு வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடு வாங்குவோர்
இது குறித்து ஆஷர் குழுமத்தின் துணைத் தலைவர் தர்மேந்திரா ராய்ச்சுரா கூறுகையில், "இது ஒரு நல்ல சந்தைக்கான அடித்தளத்தை அமைக்கிறது. குறைந்த வட்டி விகிதங்கள் வீடு வாங்குவதை எளிதாக்குகிறது. மேலும் டெவலப்பர்களுக்கு இது புதிய திட்டங்களை அதிக நம்பிக்கையுடன் தொடங்க உதவுகிறது" என்றார்.
குறிப்பாக இந்த வட்டி குறைப்பு நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கே அதிக பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெவலப்பர்கள் இந்த வட்டி விகிதக் குறைப்பை வைத்தே வீடுகளை மக்கள் வாங்கும் முடிவை எடுப்பதாகக் கருதுகிறார்கள். வீடுகள் மட்டுமின்றி கார் விற்பனையும் கூட சில காலமாகச் சரிந்து வரும் நிலையில், அதற்கும் இது உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்குக் கிடைக்காது
இதில் நாம் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் ரெப்போ வங்கி விகிதம் குறைப்பதால் தானாக அனைத்து கடன்களுக்கான வட்டிகளும் குறையாது. சில வங்கிகள் குறைந்தாலும் பல வங்கிகள் குறைப்பதில் என்ற புகார் இருக்கிறது. எனவே, நீங்கள் உங்கள் வங்குக்கு நேரடியாகச் சென்று வட்டி குறைப்பை உறுதி செய்யுங்கள். அதேபோல கடன் வாங்கும்போதே Floating அதாவது சந்தையுடன் லிங்க் ஆகியுள்ள வட்டி விகிதத்தில் கடன் பெறுவோருக்கு மட்டுமே வட்டி குறையும். Fixed ரேட் எனப்படும் நிலையான வட்டி விகிதத்தில் கடன் பெற்றவர்களுக்கு இது பொருந்தாது.












Click it and Unblock the Notifications