3000 புள்ளிகள் சரிவில் Sensex 13 லட்சம் கோடியை இழந்து நிற்கும் முதலீட்டாளர்கள்.. என்னதான் நடக்குது?
மும்பை: இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் உலகளாவிய சந்தை நிலவரங்கள் கலவையாக இருந்த நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டு முக்கிய குறியீடுகள் சரிவைப் பதிவு செய்துள்ளது.
இந்த நான்கு நாட்கள் தொடர்ச்சியான வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தங்களுடைய முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர். இது சாதாரண மக்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் குறியீடு சுமார் 1,100 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 74,943 என்ற உச்சபட்ச குறைந்த அளவைத் தொட்டது. இதன் மூலம் சுமார் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. அதேபோல், நிஃப்டி 50 குறியீடு 1.3 சதவீதம் சரிந்து 23,508 என்ற நாளின் குறைந்த அளவை எட்டியது.
நான்கு நாட்கள் தொடர்ச்சியான சரிவு
கடந்த நான்கு வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் மொத்தம் 3,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இது சுமார் 4 சதவீதம் சரிந்தது. நிஃப்டி 50 குறியீடும் 3 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. இந்த தொடர்ச்சியான வீழ்ச்சி முதலீட்டாளர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. மே 6-ம் தேதிக்கு பின்பு இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்துள்ளது.
ரூ.13 லட்சம் கோடி இழப்பு
இந்த நான்கு நாட்கள் சரிவின் போது மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு (மார்க்கெட் கேபிடலைசேஷன்) ரூ.473 லட்சம் கோடியில் இருந்து ரூ.460 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளனர். இந்த இழப்பு பங்குகளில் முதலீடு செய்துள்ள பல சாதாரண குடும்பங்களின் சேமிப்பை பாதித்துள்ளது. பங்குச் சந்தை வீழ்ச்சி என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல; அது பலரின் எதிர்கால திட்டங்களையும் பாதிக்கும் ஒன்று.
இந்த வீழ்ச்சிக்கு பின்னால் பல்வேறு உலகளாவிய மற்றும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக ஏற்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியின் சிக்கன கோரிக்கை
பிரதமர் மோடி, மக்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த சிக்கன அறிவிப்புகள் பொருளாதார நிலைமை குறித்த கவலையை சந்தையில் உருவாக்கியதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் எதிரொலியாக பல முக்கியமான பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளது, குறிப்பாக ப்ளூ சிப் பங்குகளை கடுமையாக பாதித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் பதற்றம் தொடர்கிறது
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராததால் உலக சந்தைகள் பதற்றத்தில் உள்ளன. போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் இறுதி அமைதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடன் உள்ள போர் நிறுத்தம் எப்போது வேண்டுமானாலும் முடிவடையலாம் என்று எச்சரித்துள்ளார். இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் உள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பேரலுக்கு 100 டாலருக்கு மேல் உள்ளது. இந்தியா தனது எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. எண்ணெய் விலை உயர்ந்தால் பணவீக்கம் அதிகரிக்கும், ரூபாய் மதிப்பு குறையும், பொருளாதார வளர்ச்சி வேகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் சந்தையில் நிலவுகிறது.
ரூபாய் மதிப்பு சரிவு
இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை ரூபாய் 35 பைசா சரிந்து, டாலருக்கு எதிராக வரலாறு காணாத 95.63 என்ற அளவுக்கு வீழ்ந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வும், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவதும் ரூபாயை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றம்
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து பங்குகளை விற்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இதுவரை சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை அவர்கள் விற்றுள்ளனர். மே மாதத்தில் மட்டும் ரூ.19,500 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவும் சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க டாலர் மற்றும் பாண்ட் ஈட்டல் உயர்வு
அமெரிக்க டாலர் வலுப்பெறுவதும், அமெரிக்காவின் 10 ஆண்டு பத்திர முதலீட்டின் லாபம் உயர்வும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அமெரிக்க 10 ஆண்டு பத்திர முதலீட்டின் லாபம் 4.42% ஆக உயர்ந்துள்ளது.
உலக அரசியல் பதற்றம், உயர்ந்த எண்ணெய் விலை, ரூபாய் சரிவு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வெளியேற்றம் ஆகியவை இணைந்து இந்திய பங்குச்சந்தையில் கடும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளன.












Click it and Unblock the Notifications