திமுகவில் இணைந்த காங்கிரஸ் தேசிய நிர்வாகி ஸ்ரீநிதி.. கட்சியினர் மீது கடும் குற்றச்சாட்டு!
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஸ்ரீநிதி தற்போது திமுகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்துள்ளார் ஸ்ரீநிதி.
காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசலால் தொகுதியில் எந்த பணியும் செய்ய முடியவில்லை என ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் கொங்கு மண்டலத்திலிருந்து பெண் தலைவர்கள் முன்னேறக்கூடாது என நினைக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீநிதி வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் கிரிபிரசாத் வெற்றி பெற்றார்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி இருந்தது.
ஜோதிமணியின் கருத்துக்கு சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் வேட்பாளரும், இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளருமான ஸ்ரீநிதி எதிர்வினையாற்றிய நிலையில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.












Click it and Unblock the Notifications