எடப்பாடி பழனிசாமியே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுகள்.. அடுத்தடுத்து ராஜினாமாக்கள்.. இன்று முக்கிய ஆலோசனை
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடனும், மாலையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். வருகிற 8-ந்தேதி வரை பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நேற்று போல் இன்றைய கூட்டத்திலும் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
2026 சட்டசபை தேர்தலுக்கு பின்னர் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் யாருமே நினைத்து பார்க்காத மாற்றங்கள் நடந்து வருகிறது. யார் எல்லாம் பார்த்து பார்த்து கட்சியை வளர்த்தார்களோ, யார் எல்லாம் கட்சியின் பெரிய முகங்கள், முக்கிய முகங்கள் என்று அறியப்பட்டார்களோ, அவர்கள் எல்லாருமே அடுத்தடுத்து விலகி தவெகவில் சேர்ந்து வருகிறார்கள். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் தவெகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அந்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்றும் கூறுகிறார்கள். இதுதான் பிரச்சனைக்கு காரணமாக விலகும் நிர்வாகிகள் கூறுகிறார்கள். அதேபோல் தவெகவிற்கு ஆதரவு தராமல் திமுக உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதாகவும் குற்றம்சாட்டி விலகி வருகிறார்கள். ஒரே காரணத்தை திரும்ப திரும்ப எல்லா நிர்வாகிகளும் கூறி தவெகவில் இணைந்து வருகிறார்கள்.

2019 முதல் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. இதனால் முன்னணி நிர்வாகிகள் எதிர்காலம் பாதிக்குமோ என்று கருதி சோகத்தில் விலகுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதிமுகவில் தேர்வான 6 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் சேர்ந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரும் அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஒரு நாளில் மட்டும் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் திருச்சியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, திருப்பூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), எம்.ராம்குமார் (கும்பகோணம்), ராஜவர்மன் (திருச்சுழி), சதன்பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி), மாவட்ட செயலாளர்கள் பி.கே.வைரமுத்து (புதுக் கோட்டை), இளம்பை தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஒரத்தநாடு மா.சேகர் (தஞ்சை), சீனிவாசன் (திருச்சி) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், 208 ஒன்றிய செயலாளர்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்
நேற்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் ராஜினாமா செய்தார். இன்று தவெகவில் சேருகிறார்.
இப்படியான சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று காலையில் செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மாலையில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று காலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடனும், மாலையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். வருகிற 8-ந்தேதி வரை பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நேற்று ஆலோசனை கூட்டத்தில் பேசும் போது, தவெகவின் வளர்ச்சியை கணிக்க தவறிவிட்டதை ஒப்புக்கொண்டார். எனினும் மாவட்டந்தோறும் இளைஞர், இளம்பெண்கள் பாசறையை சீர்படுத்த, இளைஞர்களை கவர அதிரடி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இன்று அதுபற்றி விளக்கமாக நிர்வாகிகள் பேச வாய்ப்பு உள்ளது.














Click it and Unblock the Notifications