சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றது ஏன்.. நிர்வாகிகளிடம் ஓபனாக எடப்பாடி பழனிசாமி விளக்கம்
சென்னை : சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். இந்தசூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தொடர் நடத்தி வருகிறார்கள். நேற்று வேலூர் மாவட்ட நிர்வாகிளுடன் பேசும் போது, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக இடையே தான் போட்டி என நினைத்து த.வெ.க.வை கணிக்கத் தவறிவிட்டோம் என்று கூறினார். மேலும் பதவி சுகம் அனுபவித்தவர்கள் மட்டுமே விலகியுள்ளதாகவும், அடிமட்ட தொண்டர்கள் கட்சியில் தான் இருக்கின்றனர் என்றும் செங்கல்பட்டு நிர்வாகிகள் கூட்டத்தில் கூறினார்.
அதிமுகவின் மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறது. ஏனெனில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்த நிலையில், இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுகவிடம் இழந்துள்ளது. அதிமுகவின் தோல்விக்கு தவெக கூடன் கூட்டணி வைக்காதது தான் காரணம் என்று நிர்வாகிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

அத்துடன் திமுக உடன் சேர்ந்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக கூறி, அந்த கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அதிமுகவில் தேர்வான 6 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் சேர்ந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரும் அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நாளில் இருந்தே தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள்.
நேற்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் ராஜினாமா செய்தார். இன்று தவெகவில் சேருகிறார். அவருடன் யார் யார் தவெகவில் சேரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.. இந்த சூழலில் அ.தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமோ என்று அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று காலையில் செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மாலையில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
செங்கல்பட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனையின்போது, கட்சி நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கட்சியில் பதவி சுகங்களையும், ஆட்சி அதிகாரங்களையும் அனுபவித்தவர்கள் தான் விலகிச்சென்றுள்ளார்கள். கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எல்லாம் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். எனவே, எல்லாரும் உற்சாகமாக கட்சிப்பணியாற்றுங்கள். இடைத்தேர்தல் வந்தால் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்காக கடுமையாக உழையுங்கள். மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தலில் அனைவருக்கும் உரிய வாய்ப்புகள் தரப்படும்" என்றார்.
நேற்று மாலை வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக இடையே தான் போட்டி என நினைத்து தமிழக வெற்றிக்கழகத்தை கணிக்கத் தவறிவிட்டோம். அதன் விளைவாக இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். சினிமா மோகத்தில் இளைஞர்களும், குழந்தைகளும், தங்களது பெற்றோரை வலியுறுத்தி வாக்களிக்க வைத்துவிட்டார்கள் மாவட்டந்தோறும் இளைஞர், இளம்பெண்கள் பாசறையை சீர்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதேபோல, அ.தி.மு.க. மக்களுக்கு தந்த திட்டங்களை இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.














Click it and Unblock the Notifications