அனிதா ராதாகிருஷ்ணனை.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய சொன்னது யார்? - செங்கோட்டையன் விளக்கம்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். இந்த கைது நடவடிக்கையின்போது.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய சொல்லி தன்னை காவல்துறையினர் கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார். இது விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த மாதம் 20ம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் பேசும்போது.. முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தவெக நகர செயலாளர் செல்வம் சார்பில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இருப்பினும் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தை அவர் நாடியிருந்தார். ஆனால், ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜாமீன் மறுத்த 90 நிமிடங்களில் அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அவரை அழைத்து சென்றபோது, எம்எல்ஏ பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று போலீசார் வற்புறுத்துவதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருந்தார்.
"எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய என்னை கட்டாயப்படுத்துகிறார்கள். என்னால் அது முடியாது. எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன நினைக்கிறாரோ! அதைத்தான் செய்வோம். என்னை தொட்டு பார்க்க முடியாது. நான் தவறு செய்யாதவன். தவறு செய்யாத என்னை தொட்டால்.. நான் அடங்க மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
ஏற்கெனவே அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், தற்போது திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனையும் ராஜினாமா செய்ய சொன்னதாக குற்றச்சாட்டு வந்திருப்பது.. தவெக மீதான சீரியஸான விமர்சனங்களை தூண்டியது. இப்படி இருக்கையில் நடந்தது என்ன? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
"காவல்துறை தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. இதை பொறுத்தவரை, யாரும் அனிதா ராதாகிருஷ்ணனை யாரும் வற்புறுத்தவில்லை. யார் ராஜினாமா செய்ய சொன்னார்கள்? என்று தெளிவாக சொன்னால் குற்றச்சாட்டு குறித்து பேசலாம்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications