’அந்த பழக்கம்’ திமுகவுக்கு கிடையாது! நான் நினைச்சா எடப்பாடியே காலி! சீனியர்களிடம் வெடித்த ஸ்டாலின்!
சென்னை: தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை தெரிவித்ததாக அறிவாலய வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. "எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்" என தான் சொன்ன சில நாட்களில் இப்படி நடந்துள்ளதால் திமுகவுக்கு தான் அவப் பெயர் வரும் என தெரிவித்ததாகவும் சொல்கின்றனர் திமுகவின் சீனியர்கள்..
கடந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் தனித்துப் போட்டியிட்டது. நடிகரும் கட்சியின் தலைவருமான விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் களம் கண்ட நிலையில் இறுதி முடிவு யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது. ஆளுங்கட்சியான திமுக இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
குதிரை பேரம்
ஆச்சரியம் அளிக்கும் வகையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக்கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன முக ஸ்டாலின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். எனவே, உடன்பிறப்புகள் தயாராக இருக்க வேண்டும் என பேசி இருந்தார்.
இளையராஜா எம்எல்ஏ
அவர் பேசிய சில நாட்களில் தமிழக அரசியலை புரட்டிப் போடும் சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் குதிரை பேரம். சபாநாயகருக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு ஒரு கும்பல் பேசியதாக பரபரப்பு புகார் எழுந்தது. ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா முதன்முறையாக இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தலைமறைவாகி இருக்கும் நிலையில் அவரது தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் செந்தில் பாலாஜி, அவர்கள் தம்பி அசோக்குமாருக்கு நெருக்கமானதாக சொல்லப்படும் திருநாவுக்கரசு, நரேஷ்,தியாகராஜன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
180 கோடி ரூபாய்
35 கோடி ஒரு எம்எல்ஏவுக்கு பேரம் பேசப்பட்டதாகவும், இதில் 180 கோடி ரூபாய் வரை புழங்க இருந்ததாக வெளியாகி உள்ள தகவல் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஆளுங்கட்சி தரப்பில் தொடர்பு இருக்கிறதா? அல்லது வேறு யாரேனும் இந்த நேரத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இது கரூர் கேங் நடத்திய ஆப்பரேஷனுக்கும், திமுக தலைமைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்கின்றனர் திமுக உடன் பிறப்புகள்.
முக ஸ்டாலின்
அதுமட்டுமல்லாமல் இதுகுறித்து தெரிந்து கொண்ட உடனே திமுக தலைவர் முக ஸ்டாலின் அதிருப்தி அடைந்ததாகவும், சீனியர்களை அழைத்து டோஸ் விட்டதாகவும் சொல்லப்படுகிறது. கட்சி அலுவலகத்தில் இல்லாமல் தனது வீட்டிலேயே ஸ்டாலின் திமுகவின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் துரைமுருகன், ஆ ராசா, உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் மட்டும் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதிமுக திமுக
"ஏற்கனவே அதிமுக திமுக இணைந்து ஆட்சி என கூட்டணி கட்சிகள் பொதுவெளியில் போட்டு உடைத்து விட்ட நிலையில் திமுகவின் பெயர் ரொம்பவே கெட்டுவிட்டது. இந்த நிலையில் தற்போது குதிரை பேரம் புகார் திமுகவுக்கு மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் செய்ய சொன்னது யார்? செந்தில் பாலாஜி யாரின் பேச்சைக் கேட்டு இப்படி செய்தார்?. எனக்கு தெரியாமல் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியது எப்படி?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினாராம்.
ஸ்டாலின் எச்சரிக்கை
"2019 தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்ற போது 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அப்போது ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு இருந்தும் நாம் செய்யவில்லை. குறுக்கு வழியில் திமுக என்றைக்குமே ஆட்சியை கைப்பற்றியது கிடையாது. தற்போது ஆட்சியை கவிழ்க்க கூடாது. கூட்டணி கட்சிகள் விலகினால் மட்டுமே தேர்தல் வரும் நாம் சந்திப்போம் என்ற அடிப்படையில் தான் நான் பேசி இருந்தேன். ஆனால் இப்போது செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலரது செயல்பாடுகளால் நான் சொல்லியே குதிரை பேரம் நடந்ததாக பொதுவழிகளில் பேசப்படாதா" என அவர் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் "வரும் காலத்தில் இது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது" கடுமையாக எச்சரிக்கை விடுத்ததாக சொல்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications