“அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!” - வெளிநாடு புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்!
சென்னை: தேர்தல் தோல்வி, திமுக எம்எல்ஏ கைது போன்ற அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மனைவி துர்கா ஸ்டாலினுடன் வெளிநாட்டுக்கு புறப்பட்டிருக்கிறார்.
"அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்" என ஸ்டாலின் தனது x பக்கத்தில் இந்த பயணம் குறித்து பதிவிட்டிருக்கிறார். அவரை விமான நிலையத்தில் தொண்டர்கள் வழியனுப்பி வைத்திருக்கின்றனர்.

தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!" - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல். நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன். அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!" என்று கூறியிருக்கிறார்.
பயண திட்டம்
உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, மான்செஸ்டரில் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் உயர்கல்வி பயின்று வருகிறார். அவரது பட்டமளிப்பு விழா இந்த மாதம் நடைபெற உள்ளதால், அதில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் லண்டன் செல்கிறார்.
பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து, சுமார் 10 நாட்கள் லண்டனில் தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ள அவர், ஜூலை 20-ம் தேதிக்குப் பிறகு சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம் அரசியல் ரீதியாகப் பல்வேறு விவாதங்களைக் கிளப்பினாலும், இது ஒரு தனிப்பட்ட குடும்பப் பயணம் என்றே அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications