பட்ஜெட் 2018: இந்த வரியை குறைத்தால் முதலீடு பெருகும்.. செய்வாரா ஜேட்லி?
Recommended Video

டெல்லி: கார்பொரேட் வரியை குறைத்து வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பது இந்திய தொழில்துறையின் கோரிக்கை. ஆனால் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சுமார் 3 வருடங்களாக தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகிறார்.
"ஆசியாவிலுள்ள பெரிய நாடுகளின் கார்பொரேட் வரியுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் 30 சதவீத கார்பொரேட் வரி விகிதம் அதிகம். இதனால், நமது உள்நாட்டு தொழில்துறைக்கு பாதிப்பு" என நிதி அமைச்சர் ஜேட்லி 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் உரை நிகழ்த்தினார். ஆனால் 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள ஜேட்லி இதுவரை தனது வார்த்தையை காப்பாற்றவில்லை.
இந்த நிலையில், நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டிலாவது இதை ஜேட்லி அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினரிடையே எழுந்துள்ளது.

சந்தேகம்தான்
பொருளாதாரம் மந்தமான வளர்ச்சியில் உள்ளதாலும், பணப்புழக்கம் குறைந்துள்ளதாலும், கார்பொரேட் வரியை குறைப்பது குறித்து ஜேட்லி சிந்திப்பாரா என்பது சந்தேகம் என்கிறார்கள் சில பொருளாதார வல்லுநர்கள். ஆனால் கார்பொரேட் வரியை குறைப்பதுதான் நாட்டுக்கு நல்லது, பொருளாதாரத்திற்கு நல்லது என்பதும் அவர்கள் கருத்து.

அமெரிக்காவில் குறைப்பு
அமெரிக்காவில் கார்பொரேட் வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவும் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியது கட்டாயம் என்கிறார் பொருளாதார நிபுணர் ஜெயேஷ் சங்க்வி. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டுமானால், கார்பொரேட் வரியை குறைக்க வேண்டும். 10-15 சதவீத வித்தியாசம் என்பது முதலீட்டாளர்கள் வேறு நாடுகளை நோக்கி பார்வையை திருப்ப உதவும் என்பது பொருளாதார வல்லுநர்கள் கருத்து.

வேலைவாய்ப்பு அதிகரிப்பு
கார்பொரேட் வரியை குறைத்து, முதலீடு அதிகரித்தால் வேலை வாய்ப்பு பெருகும். இது இந்திய பொருளாதாரத்திற்கு நல்லதுதான் என்கிறார்கள் தொழிலதிபர்கள். டெலாய்ட் என்ற அமைப்பு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 120 வல்லுனர்களிடம் ஆய்வு மேற்கொண்டு ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. ஆய்வில் பங்கேற்றோரில், 50 சதவீதம் பேர், மத்திய பட்ஜெட்டில், கார்ப்பொரேட் நிறுவனங்கள் வரி, தற்போதைய 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ப.சிதம்பரம் குறைத்தார்
கடந்த 2005ல் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கார்பொரேட் வரியை 35 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைத்தார். அதன்பிறகு இந்த வரி விதிப்பில் யாரும் மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications