ஹரியானாவில் மீண்டும் மேலே எழுந்து வந்த பாஜக.. அப்செட்டில் காங்கிரஸ்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்
சண்டிகர்: ஹரியானாவில் இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்படுவதால், யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள்? என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் எகிறி வந்தன. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது கூடுதல் ஆர்வத்தை அதிகரித்தது. இறுதியில் பாஜகவுக்கு சாதகமாகவே முடிவுகள் வந்துள்ளன.
ஹரியானா சட்டப்பேரவையை பொறுத்தவரையில், 90 உறுப்பினர் இடங்கள் இருக்கின்றன.. இதில் மெஜாரிட்டிக்கு 46 இடங்கள் தேவை.. தற்போது 10 வருடமாக பாஜக ஆட்சியில் உள்ளது.. கடந்த 2014ல் நடந்த தேர்தலின்போது, மொத்தம் 47 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பாஜக பிடித்திருந்தது.. ஆனால் 2019 தேர்தலில், வெறும் 40 இடங்களை மட்டுமே பாஜகவால் பெற முடிந்தது.

அப்போதே காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றியிருந்ததை மறுக்க முடியாது.. கொஞ்சம் முயற்சித்திருந்தால், ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்களுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை வைத்திருக்கலாம்.. எனினும், அம்முயற்சி பெருத்த பலனை காங்கிரசுக்கு அப்போது தரவில்லை..
பாஜக ஆட்சி: காங்கிரஸ் அன்று சறுக்கியதைத்தான், சரியாக பயன்படுத்தி கொண்ட பாஜக, ஜனநாயக ஜனதா கட்சியுடன் சேர்ந்து ஆட்சியையும் அமைத்து, துஷ்யந்த் சவுதாலாவை துணை முதல்வர் பதவி தந்து தனக்கு பக்கத்திலும் வைத்துக் கொண்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால், இந்த 10 வருட பாஜக ஆட்சி மீது, மக்கள் வெறுப்படைய துவங்கிவிட்டனர்.. விவசாயிகளின் போராட்டம், அக்னிபத் திட்டம், ஓபிசி இட ஒதுக்கீடு, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் என ஒவ்வொரு பிரச்சனைகளும் பூதாகரமாக வெடித்து, பாஜகவுக்கு எதிராக திரும்பின..
அதிருப்திகள்: அன்று ஆட்சி அமைக்க கை கொடுத்த துஷ்யந்த் சவுதாலா, கூட்டணியை விட்டு உடைத்துக் கொண்டு வெளியேறினார்.. பாஜகவின் அதிருப்திகளும், துஷ்யந்த் சவுதாலாவின் வெளியேற்றமும் காங்கிரசுக்கு ஆகச்சிறந்த பலமாகி விட்டன.
இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தலை சந்தித்துள்ளது ஹரியானா மாநிலம்.. இந்த முறை பாஜக தனித்தே களம் கண்டது.. ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தள்-பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சிகள் உள்ளிட்டவை இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கின்றன என்றாலும், பாஜக VS காங்கிரஸ் கட்சிக்குள்தான் நேரடி போட்டி நடந்துள்ளதாக தெரிகிறது.
மைனஸ்: இம்மாநிலத்தை பொறுத்தவரை, ஜாட் சமூகத்தினர் அதிகமுள்ள மாநிலமாகும். இவர்களுக்கான ஒதுக்கீடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், தலைதூக்கியிருப்பது பாஜவுக்கு மைனஸாக அமைந்துள்ளதாக கூறப்பட்டது.
அதேபோல, சுமார் 3.09 கோடி மக்கள் வாழும் ஹரியானாவில், கடந்த 2 வருடங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.. கடந்த வருடம் CMIE வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவிலேயே வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ள மாநிலம் ஹரியானா என்றும், இது தேசிய அளவிலான வேலைவாய்ப்பின்மையில் 37.4% என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்ததை நாம் மறுக்க முடியாது.
வாய்ப்பு: அதுமட்டுமல்ல, பாஜகவில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து தன்னிச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 8 பாஜக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதும் பாஜகவுக்கு மைனஸாகிவிட்டதாக கூறப்பட்டது.
வழக்கம்போல காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக பிரச்சாரங்களை மேற்கொண்டாலும், தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று முடிவுகள் வெளியாகியிருந்தன..
இன்று முடிவு: 60 சீட்களை பிடிப்போம் என்று சொல்லி கொண்டிருக்கும் பாஜகவுக்கு, எக்ஸிட் போல்களும் மிகுந்த அதிர்ச்சியை தந்திருந்ததாகவே தெரிகிறது. ஒருவேளை சர்வே முடிவுகள் உண்மையாகும்பட்சத்தில், காங்கிரஸ் 10 வருடத்துக்கு பிறகு ஆட்சி அமைக்கும்.. தேர்தல் கணிப்புகள் பொய்யாகும் பட்சத்தில், மீண்டும் ஆட்சியை அமைத்து, ஹாட்ரிக் வெற்றியை பாஜக பெறக்கூடும்.. இதில் மக்களின் முடிவு என்ன என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாஜக 52 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது... ஹரியானாவில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் தொடர்ந்து 3 முறை வெற்றி பெறாத நிலையில், பாஜக சாதனையை எட்டியிருக்கிறது. அதிலும், ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் 36 இடங்களில் 19 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications