உட்கார்ந்து எண்ணியிருக்கார் பாருங்களேன்.. கெஜ்ரிவால் 51 ஆயிரம் பொய் சொல்லிருக்கிறார்: சன்னி விளாசல்
சண்டிகர்: ‛‛51 ஆயிரம் பொய்கள் கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் கணிப்புகளை கைவிட வேண்டும்'' என பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் பஞ்சாப்பில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சித்து இடையேயான மோதல், அமரீந்தர் சிங் ராஜினாமா, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் தேர்வு என பல்வேறு குழப்பங்கள் நிலவினாலும் ஒரு வழியாக காங்கிரஸ் கட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இங்குள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் மாநிலத்தில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

மும்முனை போட்டி
காங்கிரஸ், ஆம்ஆத்மி தனித்து களம் இறங்கும் நிலையில் பாஜக கூட்டணியாக தேர்தலில் குதித்துள்ளது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சாவின் எஸ்ஏடி கட்சிகள் உள்ளன. இதில் பாஜக 65 இடங்களிலும், அமரீந்தர் சிங் கட்சி 37 இடங்களிலும், தின்ட்சாவின் கட்சி 15 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ஓட்டு சேகரிப்பு
இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்திலாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அதிக கவனம் செலுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். ஆம்ஆத்மியும் டெல்லியில் உள்ள ஆட்சியை பஞ்சாப்புக்கு விரிவுப்படுத்தும் நோக்கில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பாஜகவும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் ஓட்டுசேகரித்து வருகிறது.

2 தொகுதியிலும் தோல்வி
இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். ஓட்டுப்பதிவுக்கு சில நாட்களே உள்ளதால் சென்டிமெண்டாகவும் பேச துவங்கியுள்ளனர். இந்நிலையில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி வாகை சூடும் என அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி வருகிறார். மேலும் ‛‛பாதூர், சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சன்னி தோல்வியடைவார். துரி தொகுதியில் போட்டியிடும் ஆம்ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் பகவாந்த் குறைந்தபட்சம் 51 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்'' என சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

கணிப்புகள் தவறாகும்
இதற்கு உடனடியாக பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி பதிலளிக்கவில்லை. தற்போது அந்த டுவிட்டர் பதிவுக்கு அவர் விமர்சனம் செய்துள்ளார். சரண்ஜித் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் தொடர்பான கணிப்புகள் செய்வதை நிறுத்த வேண்டும். இதுவரை நீங்கள் 51 ஆயிரம் பொய்களை கூறிவிட்டீர்கள். 2014ம் ஆண்டில் கூறியது போலவே தற்போதைய கணிப்பும் தவறானது என நிரூபிக்கப்படும்'' என கூறியிருந்தார்.

நடந்தது என்ன
அதாவது 2014 பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் வாரணாசியில் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛வாரணாசியி் பல நாட்களுக்கு பின் எனக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. மோடி வாரணாசி தொகுதியை இழக்கிறார். அவர் போட்டியிடும் இன்னொரு தொகுதியான வதோதராவில் கவனம் செலுத்த வேண்டும்'' என குறிப்பிட்டார். ஆனால் இதில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்தார். நரேந்திர மோடி வெற்றி பெற்று பிரதமரானார். மேலும் அதே தேர்தலில் டெல்லியில் 6 முதல் 7 தொகுதியில் ஆம்ஆத்மி வெற்றி பெறும் என கூறியதும், 2017 பஞ்சாப் தேர்தலில் அமரீந்தர் சிங் தான் போட்டியிடும் 2 தொகுதிகளிலும் தோல்வியடைவார் பலிக்கவில்லை.
இதனால் தான் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் தொடர்பான கணிப்புகளை கைவிட வேண்டும் என சரண்ஜித் சன்னி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications