முடிந்தது 'மிஷன் பஞ்சாப்'.. அடுத்து ராஜஸ்தான் தான்.. சச்சின் பைலட்டிற்கு முக்கிய பதவி? பரபர தகவல்
சண்டிகர்: அமரீந்தர் சிங் பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானிலும் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவியை அளிக்கக் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு செய்துள்ளதாகவும் ஆனால் இதை ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட் ஏற்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பஞ்சாப் காங்கிரஸில் அதிகாரப் போட்டி நடந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் அமரீந்தர் சிங்க முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னியின் நியமனம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து ராஜஸ்தான்
பஞ்சாப் பஞ்சாயத்து இப்போது முடிந்துள்ள நிலையில், அடுத்து ராஜஸ்தானில் அரசியல் சதுரங்க விளையாட்டு தொடங்கியுள்ளது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் முதல்வராக உள்ள நிலையில், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் காங்கிரஸின் இளம் தலைவரான சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் விடுத்து வருகின்றனர். சச்சின் பைலட் மேற்கொண்ட கடின உழைப்பின் காரணமாகவே ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததாகவும் அதன் காரணமாக முதல்வராக அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலாளர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

முதல்வரை மாற்ற வேண்டும்
பைலட் ஆதரவாளராகக் கருதப்படும் மகேஷ் சர்மா இது குறித்து மேலும் கூறுகையில், "ராஜஸ்தானிலும் முதல்வர் மாற்றப்பட வேண்டும். சச்சின் பைலட் மேற்கொண்ட கடின உழைப்பின் அடிப்படையிலேயே ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இம்மாதிரியான சூழலில், ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்ய வேண்டும். அப்படி முதல்வர் பதவி சச்சின் பைலட்டுக்கு வழங்கப்பட்டால் வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அது பயன் தரும்" என்றார்.

சத்தீஸ்கர் மாநிலம்
ராஜஸ்தானில் சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற மேலிடத்தின் முடிவை அசோக் கெலாட் ஏற்க மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. சத்தீஸ்கரிலும் இதுபோன்ற சூழல்தான் நிலவிவருகிறது. ஆனால், 50 எம்எல்ஏக்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று தனது பலத்தை முதல்வர் பூபேஷ் பாகல் நிரூபித்துள்ளார். இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை மாநில முதல்வர்கள் ஏற்காமல் இருப்பது அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

ராஜஸ்தான் நிலை என்ன
பஞ்சாபில் முதல்வரை மாற்றியதன் மூலம் மற்ற மாநில காங்கிரஸ் முதல்வர்களுக்கு அக்கட்சி எச்சரிக்கை விடும் விதமாகச் செயல்பட்டுள்ளது. ராஜஸ்தானைப் பொருத்தவரை அமைச்சரவை விரிவாக்கமும் கட்சி கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வரவும் காங்கிரஸ் தயாராக உள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

அஜய் மக்கான்
இது குறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அஜய் மக்கான் கூறுகையில், "அசோக் கெலாத்துக்கு மட்டும் உடல்நலக்குறைவு ஏற்படவில்லை என்றால் அமைச்சரவை விரிவாக்கத்தை மேற்கொண்டிருப்போம். மாநகராட்சி போர்டு, மாவட்ட தலைவர்கள் நியமனங்களை மேற்கொள்ளத் தயாராக உள்ளோம். வீட்டிலிருந்து தான் அவர் பணிகளைக் கவனித்து வருகிறார். அவரின் உடல்நிலை சரியான பின்பு, இங்கு இருக்கும் பிரச்சினைகள் சரி செய்யப்படும்" என்றார்.

அடுத்து என்ன
சச்சின் பைலட் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "மாவட்ட அளவில் நாங்கள் அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அளவில் ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவோம்" என்றார். பஞ்சாபில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக நியமித்து இருப்பது மாஸ்டர் ஸ்ட்ரோக் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் முதல்வர்கள் மாற்றப்படுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications