உயிரோடு இருக்கேன்.. மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா வீடியோ வெளியிட்டு விளக்கம்
நிஷா தாஹியா வீடியோ வெளியிட்டு விளக்கம் தந்துள்ளார்
சண்டிகர்: மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியாவும் அவரது சகோதரரும் மர்ம நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து வீடியோ மூலம் விளக்கம் தந்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நிஷா தாஹியா.
Recommended Video
ஹரியானாவை சேர்ந்தவர் நிஷா தாஹியா.. இவர் புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனை ஆவார்.. சமீபத்தில் செர்பியாவின் பெல்கிரேடில் நடந்த 23 வயதுக்கு உட்பட்டோருக்கான மல்யுத்த தொடரில் நிஷா கலந்து கொண்டார்.
அத்துடன், 65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார்..

இதையடுத்து, செர்பியாவில் நடைபெற்ற மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற நிஷா உள்பட 5 வீரர்களுக்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரதமர் வாழ்த்து சொன்ன அடுத்த சில மணி நேரத்திலேயே, திடீரென ஒரு செய்தி கிளம்பியது.. மல்யுத்த பயிற்சி அகாடமியில் நிஷாவையும், அவரது சகோதரர் சூரஜ்ஜையும் யாரோ மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டதாகவும், இதில் இவர்களின் அம்மா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இது மிகப்பெரிய அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது ரசிகர்கள் பரபரப்படைந்து, நிஷாவுக்கு என்ன ஆனது என்ற உண்மை நிலவரம் தெரிய அறிய முற்பட்டனர். ஆனால், உடனடியாக நிஷாவே இதற்கு விளக்கம் தந்தார். இதுகுறித்து ஒரு வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.. "நான் சீனியர்களுக்கான தேசிய சாம்பியன்ஷிப்பில் விளையாடுவதற்காக கோண்டாவில் உள்ளேன். எனக்கு எந்தவிதமான பிரச்சனை இல்லை.. சுட்டுக் கொன்றுவிட்டதாக பரவும் செய்தி வதந்தி.. நான் நன்றாகவே இருக்கிறேன்" என்று விளக்கம் தந்திருந்தார்..
இதுகுறித்து சோனிபாட் மாவட்ட எஸ்பி ராகுல் ஷர்மா சொல்லும்போது, "சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிஷா தாஹியாவும், மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியாவும் வெவ்வேறு நபர்கள்... மல்யுத்த வீராங்கனை இப்போது ஒரு நிகழ்சியில் பங்கேற்று உள்ளார்.. அவர் நலமுடன் இருக்கிறார்" என்று கூறினார். பிரதமர் வாழ்த்து தெரிவித்த நிலையில், வெளியான இந்த அதிர்ச்சி தகவல் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications