விநாயகரையே சிறையில் அடைக்கிறது காங்கிரஸ் கட்சி.. ஹரியானா பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தாக்கு!
சண்டிகர்: காங்கிரஸ் கட்சியினர் விநாயகரையே சிறையில் அடைக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மோதல் வெடித்த நிலையில், விநாயகர் சிலை போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அதைக் குறிப்பிட்டு ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். ஹரியானா மாநிலம் குருஷேத்திராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசுகையில், "நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதனை காங்கிரஸ் தடுக்கிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் விநாயகரையை சிறைக் கம்பிகளுக்குள் போடுகிறார்கள். இன்று அதே பழைய காங்கிரஸ் அல்ல, இன்றைய காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவமாக மாறிவிட்டது. பொய் சொல்வதில் காங்கிரஸ் வெட்கப்படாது" என்று மோடி குற்றம்சாட்டினார்.
நாடு முழுவதும் கடந்த 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். அதேபோல், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த 12 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் படரிகொபலு என்ற கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அப்பகுதியை சேர்ந்தவர்கள் நீர்நிலையில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.
நாகமங்களா என்ற பகுதியில் மசூதி அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றபோது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையானது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் சாலையின் இருபுறமும் இருந்த தள்ளுவண்டி கடைகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். மாண்டியா சர்கிள் பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தக் கலவரம் தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டதால், நிலைமையின் தீவிரம் கருதி, போலீசார், போராட்டக்காரர்களை கைது செய்யும் போது விநாயகர் சிலையையும் உடனடியாக போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். விநாயகர் சிலை போலீஸ் ஜீப்பில் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதனைக் குறிப்பிட்டுத்தான் ஹரியானாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications