ஹரியானா:பீம் ஆர்மி சந்திரசேகர ஆசாத் கட்சி முதல் முறையாக போட்டி! துஷ்யந்த் சவுதலா கட்சியுடன் கூட்டணி!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) முதல் முறையாக களமிறங்குகிறது. ஹரியனாவில் கடந்த தேர்தலில் கிங் மேக்கராக உருவெடுத்த துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியுடன் சந்திரசேகர ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. துஷ்ய்ந்த சவுதாலா கட்சி 70 தொகுதிகளிலும் ஆசாத் சமாஜ் கட்சி 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 1-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஹரியானாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தள், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை பிரதான கட்சிகள். ஆளும் பாஜக இம்முறை தனித்தே களம் காண்கிறது. காங்கிரஸ்- ஆம் ஆத்மியும் 'இந்தியா' கூட்டணியாக களம் காணும் முயற்சிகள் தோல்வி அடைந்ததால் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன.
2019-ம் ஆண்டு தேர்தலில் ஹரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கான 46 தொகுதிகள் கிடைக்கவில்லை. அப்போது 10 தொகுதிகளை வென்ற ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா கிங் மேக்கராக உருவெடுத்தார். 40 தொகுதிகளில் வென்ற பாஜகவும் துஷ்யந்த் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆனால் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்து கடந்த மார்ச் மாதம் துஷ்யந்த் கட்சி வெளியேறியது.
இதனால் துஷ்யந்த் கட்சி யாருடன் கூட்டணி என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. முதலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் துஷ்யந்த் கூட்டணி அமைப்பார் என கூறப்பட்டது. தற்போது மற்றொரு தலித்துகள் கட்சியான பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியுடன் துஷ்யந்த்தின் ஜனநாயக் ஜனதா கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் துஷ்யந்த் கட்சி 70 இடங்களிலும் சந்திரசேகர ஆசாத் கட்சி 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஹரியானாவில் தலித்துகள் 21% உள்ளனர். துஷ்யசந்த் கட்சிக்கு 26% பெரும்பான்மையினரான ஜாட் ஜாதியில் கணிசமான ஆதரவு இருக்கிறது. ஆனாலும் தலித்துகளிடையேயும் கணிசமான ஆதரவு உள்ளது என்பதை 2019- தேர்தலில் 4 தனித் தொகுதிகளில் வென்றதன் மூலம் நிரூபித்தார் துஷ்யந்த்.
தற்போது உ.பி. எம்பியான சந்திரசேகர ஆசாத் கட்சி முதல் முறையாக தலித்துகளின் வாக்குகளை குறிவைத்து ஹரியானாவில் களமிறங்கி உள்ளது. இதுநாள் வரை தலித் வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து களமாடிய பகுஜன் சமாஜ் கட்சிக்கு இது பெரும் நெருக்கடியாகும்.












Click it and Unblock the Notifications