ஹரியானா தேர்தல் ரிசல்ட் ஏன் பாஜகவுக்கு அக்னி பரிட்சை? 2 காரணங்கள்!
சண்டிகர்: லோக்சபா பொதுத் தேர்தல் முடிவுகளின் விளைவாக, ஹரியானா சட்டசபைத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) அக்னி பரிட்சையாக மாறியுள்ளது. தனது செயல்திறனை அளவிடப் போகும் அரையாண்டு தேர்வாகப்போகிறது. குறிப்பாக மக்களவைத் தேர்தலில் அதன் வெற்றி எண்ணிக்கை பாதியாகக் குறைந்து வாக்குப் பங்கு கணிசமாகக் குறைந்த பின்னர் இந்த தேர்தல் நடப்பதால், மாநிலத்தில் ஆட்சியைக் காப்பாற்றுவதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டதல்ல; இது பாஜக மீட்சிக்கான ஒரு அளவுகோல்.
இந்த முடிவுகள் மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவற்றில் இவ்வாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களுக்கு முந்தைய தேர்தல் மனநிலைக்கு ஒரு முன்னோடியாகவும் இருக்கும், இதனால் பாஜகவுக்கு ஹரியானா ரிசல்ட் ரொம்ப ரொம்ப முக்கியமாகும்.

ஹரியானாவில் ஐந்தில் ஒரு மடங்கு கொண்ட தலித் வாக்குகள் மிகவும் செல்வாக்கு மிக்கதாக உள்ளது. அக்னிபாத் திட்டம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கட்சியின் நிலைப்பாடு, தேர்தல் பிரச்சார மையமாக இருந்தது.
இந்த தேர்தலில் பல கட்சிகளும் கூட்டணிகளும் தங்கள் இருப்பை காப்பாற்ற போட்டியிடுகின்றன. இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி), பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி மற்றும் சந்திரசேகர் ஆசாத் ராவனின் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி கூட பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் வழக்கமான தேர்தல் கணக்கீடுகளை குலைத்துப்போடக் கூடும். இந்த சிறிய கட்சிகளும் கூட்டணிகளும் கணிக்க முடியாத ரிசல்ட்டை தரவல்லவை.
பாஜக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த பின்னர் தேர்தலை சந்திப்பதால் இயல்பாக இருக்கும் எதிர்ப்பு அலையை சமாளிக்க வேண்டும், மேலும் அதன் கூட்டணி கட்சியான ஜேஜேபி வெளியேறியுள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன் மனோஹர் லால் கட்டாரை மாற்றியது எதிர்ப்பு அலையை குறைக்கும் என பாஜக நினைக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டார்-நயப் சிங் சைனி நிர்வாகம் விவசாயிகள் மற்றும் மல்யுத்த வீரர்களிடமிருந்து பரவலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறது, மேலும் அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களிடையே அதிருப்தி நிலவுகிறது, இந்த காரணிகள் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன.
பிஜேபி மற்றும் காங்கிரஸ் இரண்டிற்கும், ஹரியானாவில் வெற்றிபெறுவது அவற்றின் உத்வேகத்தை பெரிதும் அதிகரிக்கும், இதனால் மாநில எல்லைகளைத் தாண்டி தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. பாஜக வென்றால் லோக்சபா தேர்தலில் சறுக்கியது யதேச்சையானது என சொல்லும், காங்கிரஸ் வென்றால், பாஜகவின் வீழ்ச்சி லோக்சபாவில் தொடங்கி இப்போது ஹரியானாவிலும் தொடர்கிறது என சொல்லும். இது மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும். எனவேதான் ஹரியானாவில் ஆட்சியை தக்க வைப்பது பாஜகவுக்கு அக்னி பரிட்சை என்றால், ஆட்சியை கைப்பற்றுவது காங்கிரசுக்கு அக்னி பரிட்சையாகும்.












Click it and Unblock the Notifications