"ரூ.5 கோடி வரை கிடைக்காது".. ரூ.12 கோடி லாட்டரி வென்ற பஞ்சாப் லாரி டிரைவருக்கு எவ்வளவு கிடைக்கும்
சண்டிகர்: கடந்த 15 ஆண்டுகளாக வீட்டிற்கு தெரியாமல் லாட்டரி வாங்கி வந்த லாரி டிரைவருக்கு தீபாவளி பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. ரூ.12 கோடி லாட்டரியில் கிடைத்தாலும் அவருக்கு வரிகள் உள்பட பல வகைகளில் பிடித்தங்கள் செய்யப்படும். இதனால் அவரது கைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இருக்கும். சின்ன சின்ன விஷயங்களில் பல சமயங்களில் அதிர்ஷ்டம் கைக்கொடுத்து இருக்கலாம். பலமுறை காலை வாரி விட்டு இருக்கலாம். ஆனாலும் கூட அதிர்ஷ்டம் நம் பக்கம் வராதா? என்று நாம் அவ்வப்போது நினைப்பது உண்டு.
அப்படி அதிர்ஷ்டத்தை நம்பியே கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி வாங்கி வந்த லாரி டிரைவருக்கு தற்போது ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது.
அந்த டிரைவரின் பெயர் பல்ஜிந்தர் சிங். இவர் பஞ்சாப் மாநிலம் மொகாலி அருகே உள்ள ஹம்யுன்பூர் கிராமத்தை சேர்ந்தவர். 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது வீட்டிற்கு தெரியாமல் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து பண்டிகை கால லாட்டரி வாங்கி வந்தார். அதிர்ஷ்டம் கைக்கொடுக்காவிட்டாலும் கூட மனம் தளரவில்லை.
தீபாவளி பண்டிகையையொட்டி பல்ஜிந்தர் சிங் ரூ.500 கொடுத்து மொகாலியின் ஜிராக்பூரில் உள்ள லாட்டரி கடையில் 'பஞ்சாப் மாநில டீயர் தீபாவளி பம்பர் லாட்டரி - 2026' வாங்கினார். இதில் முதல் பரிசு ரூ.12 கோடியாகும். எப்படியாவது இந்த ரூ.12 கோடி தனக்கு விழ வேண்டும் என்று அவர் வேண்டி வந்தார். நேற்று முன்தினம் நடந்த குலுக்கலில் பல்ஜிந்தர் சிங்கிற்கு ரூ.12 கோடி பரிசு விழுந்தது. இதனால் அவரது குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.
ஆனால் தற்போது பலரும் ஒரு கேள்வியை எழுப்பி வருகின்றனர். பல்ஜிந்தர் சிங்கிற்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு விழுந்தாலும் அவரது கைக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கான விடையை இங்கே தருகிறோம்.
நம் நாட்டில் ஒருவர் லாட்டரியில் பரிசு வென்றால் அதிகப்படியான வரிகளை செலுத்த வேண்டும். ஏனென்றால் லாட்டரி பரிசுத்தொகை என்பது பிற ஆதாரங்களில் இருந்து வருமானமாக (Income From Other Sources) வரையறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வரி விலக்கு என்று எதுவும் கிடையாது. இதனால் டிஎஸ்ஸாக (Tax Deducted Source) 30 சதவீதம் செலுத்த வேண்டும். ரூ.12 கோடியில் 30 சதவீதம் என்றால் ரூ.3.60 கோடி டிடிஎஸ் போய்விடும்.
இதனால் மீதம் ரூ.8.40 கோடி இருக்கும். இதில் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் இருப்பதால் சர்சார்ர்ஜ் விதிக்கப்படும். அடிப்படை வரியின் ரூ.3.60 கோடி மீது சர்சார்ஜ் 2 வகைகளில் விதிக்கப்படும். இதில் ஏதேனும் ஒரு முறையை லாரி டிரைவர் தேர்வு செய்யலாம்.
புதிய வரி விதிப்பு முறை என்றால் 25 சதவீதமும், பழைய வரி விதிப்பு என்றால் 37 சதவீதம் என சர்ஜார்ஜ் உள்ளது. இதனால் லாரி டிரைவர் எந்த முறையை தேர்வு செய்கிறாரோ அதனை பொறுத்து பணம் பிடித்தம் செய்யப்படும். அதன்படி குறைந்தபட்சம் ரூ.90 லட்சம் முதல் ரூ.1.33 கோடி வரை பிடித்தம் செய்யப்படும். பிறகு சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரியாக குறைந்தபட்சம் ரூ.18 லட்சம் முதல் ரூ.19.72 லட்சம் லட்சம் பிடிக்கப்படும்.
ஏஜன்ட் கமிஷன் தொகையை பஞ்சாப் அரசே வழங்குவதால் லாரி டிரைவருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மேற்கூறிய கணக்கீட்டில் டிடிஎஸ் தொகையை மட்டும் தான் முதலில் பிடிக்கப்படும். மற்றபடி சர்ஜார்ஜ், செஸ் வரிகளை லாரி டிரைவர் தான் கணக்கீட்டு ஆண்டு இறுதியில் வருமான வரியாக தாக்கல் செய்ய வேண்டும். இவை எல்லாம் போனால் ரூ.12 கோடி வென்ற லாரி டிரைவருக்கு ரூ.6.87 கோடி முதல் ரூ.7.30 கோடி வரை கையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
