பஞ்சாப் சட்டசபை தேர்தல் 2022: முதல் கட்சியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப்பில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது அங்கு காங்கிரஸ் கட்சியின் சரஞ்சித் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் அங்கு பெரிய அளவில் கோஷ்டி மோதல் நிலவி வருகிறது
முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இன்னொரு பக்கம் சரஞ்சித் சிங்கிற்கும் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையில் உரசல் நிலவி வருகிறது.

காங்கிரஸ்
இதற்கு இடையிலும் கூட பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பலர் காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருகிறார்கள். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அவ்வளவு வலிமையாக இந்த முறை இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பலர் காங்கிரஸ் பக்கம் தாவி வருகிறார்கள். காங்கிரஸிலேயே பல குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் பக்கம் தாவி வருகிறார்கள்.

2 பேர்
ஏற்கனவே ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 2 பேர் காங்கிரஸ் பக்கம் சென்றுள்ளனர். ருபேந்திர கார் ரூபி உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சிக்கு சென்றுள்ளனர். அதேபோல் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜக்தார் சிங் ஜக்கா காங்கிரஸ் முதல்வர் சரஞ்சித் சிங்கை பாராட்டி உள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று அச்சத்தால் இப்படி இவர்கள் கட்சி மாறி வருகிறார்கள்.

நம்பிக்கை
இந்த நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 10 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 10 பேருமே தற்போது ஆம் ஆத்மியில் எம்எல்ஏக்களாக உள்ளனர். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை உறுதி செய்வதற்காக ஆம் ஆத்மி இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

வெளியேற கூடாது
எல்லோரும் அவர்கள் தொகுதியிலேயே மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை காரணம் காட்டி யாரும் கட்சி மாற கூடாது என்பதால் ஆம் ஆத்மி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர் ஹர்பால் சிங் செம்மா இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார். இன்று அறிவிக்கப்பட்டவர்களில் அமன் அரோரா, பலிஜிந்தர் கார், குர்மீத் சிங், ஜெய் கிஷான் ஆகியோர் ஸ்டார் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications