பஞ்சாபில் குட்டி அரவிந்த் கெஜ்ரிவால்...அனைவரின் கவனத்தையும் கவர்ந்த சுட்டிக்குழந்தை
பஞ்சாபில் அமோக வெற்றியை ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குட்டி அர்விந்த் கெஜ்ரிவால் வேடமணிந்த சுட்டிக்குழந்தை அனைவரையும் கவர்ந்தது.
சண்டிகர்: ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் போல வேடமணிந்த அக்கட்சி தொண்டரின் சிறிய குழந்தை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் பலவும் ஆம் ஆத்மிக்கு சாதமாக வந்தன.
அதன்படி, தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. கருத்துக்கணிப்புகள் சொன்னது பலித்துள்ளது.

பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் ரிசல்ட்
117 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிவேற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மொத்தம் 90 இடங்களில் முன்னணியில் உள்ளது. 42% வாக்குகளை அள்ளியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பம் மொத்தத்தில் அனைத்து கட்சிகளையும் துடைத்து தூசி தட்டி துரத்தள்ளியுள்ளது. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெற்றிக்கொடி நாட்டிய ஆம் ஆத்மி கட்சி
டெல்லியை அடுத்து பஞ்சாப்பிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்குக் காரணம் மாற்றத்திற்காக கூக்குரல்தான். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தேர்வு செய்துள்ளனர். டெல்லி மாடல், இளைஞர்கள் மற்றும் பெண்களின் சாய்ஸ் ஆம் ஆத்மி கட்சியாக இருந்தது.

பகவந்த் மான்
முதல்வர் முகமாக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டதும் வெற்றிக்கான காரணமாக கருதப்படுகிறது. துரி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது வரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆம் ஆத்மி 90 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி 9 இடங்களிலும், பாஜக கூட்டணி 3 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

காங்கிரஸ் பின்னடைவு
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் தங்கள் கட்சியின் பெரும்பான்மை வெற்றியை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

குட்டி கெஜ்ரிவால்
அந்த வகையில், அங்கு ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் போல வேடமணிந்த அக்கட்சி தொண்டரின் சிறிய குழந்தை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications