ஒரே போடு!! அடுத்த ஆண்டு தேர்தல்.. பெட்ரோல், டீசல் விலையை ஒரே அடியாக குறைத்த மாநிலம்.. எது தெரியுமா
சண்டிகர்: மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைந்துள்ள நிலையில், பஞ்சாபில் பெட்ரோல் விலை ரூ 10 மற்றும் டீசல் விலை ரூ 5 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த வரி குறைப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே பெட்ரோல் விலை சதமடித்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததால் டீசல் விலையும் சில மாநிலங்களில் ரூ 100ஐ தாண்டி விற்பனையானது. இதனால் சரக்கை எடுத்துச் செல்லும் செலவு அதிகமாவதால் அத்திவாசிய பொருட்கள் விலை உயரலாம் என அஞ்சப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

மத்திய அரசு அறிவிப்பு
இந்தச் சூழில் கடந்த நவ. 3ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

பஞ்சாப் அதிரடி
அதைத்தொடர்ந்து அசாம், திரிபுரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்பதாக மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி மேலும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை ரூ 10 மற்றும் டீசல் விலை ரூ 5 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

70 ஆண்டுகளில் முதல்முறை
கடந்த 70 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி இந்தளவு குறைக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குறிப்பிட்டார். மேலும், அந்த பிராந்தியத்திலேயே பஞ்சாப் மாநிலத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளதாகவும் தலைநகர் டெல்லியைக் காட்டிலும் பஞ்சாபில் பெட்ரோல் விலை ரூ 9 குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விலை என்ன
பஞ்சாபில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 96.16 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 84.80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களான டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த வரி குறைப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தேர்தல் மாநிலங்கள்
முன்னதாக மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பாஜக ஆட்சியில் உள்ள 10 மாநிலங்கள் - அசாம், திரிபுரா, மணிப்பூர், கர்நாடகா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரப் பிரகதேதம், உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசம், குஜராத் உட்பட 6 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications