இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!
சண்டிகர்: முன்பெல்லாம் வெளிநாடுகளில் மட்டுமே இருந்த ஜாம்பி என்ற போதைப் பொருள் பயன்பாடு இப்போது இந்தியாவிலும் வந்துவிட்டது போலத் தெரிகிறது. சுமார் ஜாம்பி போதைப் பொருள் எடுத்த ஒருவர் சுமார் 2 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டு இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் அதிலும் குறிப்பாக மேற்கு மாநிலங்களில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி தான் ஜாம்பி போதைப் பொருள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் பஞ்சாப் தலைநகரான சண்டிகரில் போதைப் பொருள் சாப்பிட்டது போலத் தெரியும் ஒருவர் ஒரே இடத்தில் நிற்கிறார்.

ஒரே இடம்
அதுவும் ஏதோ 5, 10 நிமிடங்கள் எல்லாம் இல்லை. அவர் சுமார் 2 மணி நேரம் வரை அந்த ஒரே இடத்தில் நிற்கிறார். அசைவு எதுவும் இல்லாமல் அவர் ஒரே இடத்தில் இதுபோல நிற்பதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் மிரண்டு போனார்கள். இது அங்கு வசிப்போர் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
டெலிவரி பையுடன், சிகரெட்டை வாயில் வைத்தபடி வெறித்த பார்வையுடன் அவர் நின்று கொண்டிருந்தார். சுற்றுப்புறத்தைச் சிறிதும் உணராத வகையில் சுமார் 2 மணி நேரம் வரை அவர் அப்படியே நின்று கொண்டு இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இந்த அசாதாரண நடத்தையைக் கண்ட மக்கள், ஆரம்பத்தில் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்தனர். பிறகு வீடியோ எடுத்தனர்.
தலையிட்ட போலீசார்
சிலர் அவரிடம் சென்று பேசவும் முயன்றுள்ளனர். ஆனாலும், ஆடாமல் அசையாமல் அவர் அப்படியே நின்று கொண்டு இருந்தார். இதையடுத்து போலீசாருக்கு இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடனடியாக அந்த டெலிவரி ஊழியரை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் அந்த நபர் கண்களை மூடியபடி, கையில் இல்லாத ஏதோ ஒன்றைப் பார்க்கும் வகையில் நிற்கிறார். அப்படியே நீண்ட நேரம் நின்றபடியே உறங்குவது போல ஒருவித மயக்க நிலையில் காட்சியளித்தார். ரிஷு ராஜ் சிங் என்பவர் தனது ட்விட்டரில், "சண்டிகரில் இன்று மனதை உலுக்கும் நிகழ்வு... நம் நகரில் என்னதான் நடக்கிறது?" என்று பதிவிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ஜாம்பி போதைப் பொருள்
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதுடன், பலரும் இதில் ஜாம்பி போதைப் பொருள் பயன்பாடு குறித்து அச்சம் தெரிவித்தனர். முன்பு வெளிநாடுகளில் மட்டுமே இருந்த ஜாம்பி போதைப் பொருள் இப்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டதாகவும் இந்த வீடியோ அதையே தான் காட்டுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "அவர் ஏதோ தீவிரமான போதை மருந்துகளை உட்கொண்டவர் போலத் தெரிகிறது. கடவுளே பஞ்சாபைக் காப்பாற்றுங்கள்" எனப் பதிவிட்டார். இன்னொரு நபர் இது ஹெராயினின் பக்க விளைவு என்று தெரிவித்தார்.
ஜாம்பி போதை பொருள் என்றால் என்ன?
Xylazine என்பது கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வித மருந்தாகும். விலங்குகளுக்கு வலி நிவாரணமாகவும் மயக்கத்தை ஏற்படுத்தவும் தான் இந்த மருந்து முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால், அதை சில மனிதர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு ஒருவித போதையைத் தருவதாகச் சொல்கிறார்கள். இருப்பினும், அதை மனிதர்கள் தவறாகப் பயன்படுத்தும்போது மோசமான விளைவுகள் ஏற்படுத்தும்.. லேசாக மருந்து அதிகரித்தாலும் உயிரிழப்பு நிச்சயம் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள்.
ஃபெண்டானில், ஹெராயின் மற்றும் மார்ஃபின் போன்ற ஓபியாய்டுகளுடன் இந்த மருந்து கலக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை உட்கொள்ளும்போது மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, தூக்கம் பாதிப்பு, இதயத் துடிப்பு குறைதல், குறைந்த ரத்த அழுத்தம், சுவாசக் கோளாறுகள் ஏற்படும் என ஓர் ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில் இந்த போதை பொருள் பயன்பாடு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications