பிரௌன் குதிரைக்கு கருப்பு சாயம் பூசி.. ரூ. 23 லட்சம் மோசடி.. இது புது மாதிரி சதுரங்க வேட்டை!
குதிரைக்கு சாயம் பூசி ரூ. 23 லட்சம் மோசடி செய்த கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சண்டிகர்: பஞ்சாபில் குதிரைக்கு கருப்பு சாயம் பூசி, ரூ. 23 லட்சம் மோசடி செய்த கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் சாங்கிரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சிங். துணி வியாபாரியான இவருக்கு சமீபத்தில் லச்சாகாரா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் தனது நண்பர் ஒருவரிடம் கருப்பு நிற குதிரை ஒன்று இருப்பதாகவும், அந்தக் குதிரைக்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு இருப்பதாகவும் ரமேஷிடம் தெரிவித்துள்ளார்.
சந்தையில் அந்தக் குதிரை ரூ. 28 லட்சம் முதல் 30 லட்சம் வரை விற்கப்படுவதாகவும், தற்போது தனது நண்பர் அவசர பணத் தேவையில் இருப்பதால் குறைந்த விலைக்கு அதனை விற்க நினைப்பதாகவும் கூறி ரமேஷின் ஆசையைத் தூண்டியுள்ளார் லச்சாகாரா.

குதிரை விற்பனை
இதனால் குறைந்த விலைக்கு அந்த குதிரையை வாங்கி, அதனை அதிக விலைக்கு சந்தையில் விற்கலாம் என முடிவு செய்துள்ளார் ரமேஷ். அதன்படி, ரூ. 22.65 லட்சத்திற்கு அந்தக் குதிரையை பேரம் பேசி வாங்கியுள்ளார். தன் வீட்டில் கட்டிப் போட்டிருந்த அந்தக் குதிரையை மறுநாள் குளிப்பாட்டியுள்ளார் ரமேஷ்.

கரைந்து போன சாயம்
குதிரை மீது தண்ணீர் ஊற்றியதும், அதன் மீதிருந்த கருப்பு சாயம் கரைந்து போய் குதிரை இளம் பிரௌன் நிறத்திற்கு மாறியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ், உடனடியாக லச்சாகாராவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் குதிரையை விற்றவர்கள் ஒருவரையும் அவரால் தொடர்பு கொள்ள இயலவில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்ட விசயம் அவருக்கு புரிந்துள்ளது.

மோசடிக் கும்பல்
உடனடியாக இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ரமேஷ். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குதிரைக்கு கருப்பு சாயம் அடித்து ரமேஷை லச்சாகாராவும், அவரது கூட்டாளிகளும் ஏமாற்றியது தெரிய வந்தது. அதோடு, ரமேஷ் மாதிரியே மேலும் 8 பேரையும் அவர்கள் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பணத்துடன் தலைமறைவான அந்த மோசடிக் கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.

சோகம்
ரமேஷ் வாங்கிய அந்தக் குதிரை சந்தையில் விலை குறைந்த ரகத்தைச் சேர்ந்தது ஆகும். அவர் கொடுத்த ரூ. 22.65 லட்ச பணமே அந்தக் குதிரைக்கு மிகவும் அதிகம். எனவே அந்தக் குதிரையை யாரிடமும் விற்கவும் முடியாமல் சோகத்தில் உள்ளார் ரமேஷ். குதிரைக்கு சாயம் பூசி மோசடி கும்பல், வியாபாரியை ஏமாற்றிய இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications