இந்திரா காந்தியை கொன்றவரின் மகன் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டி! முதல் வேட்பாளராக அறிவித்த கட்சி
சண்டிகர்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டு கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கேஹர் சிங்கின் மகன் சாத்வந்த் சிங் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரை முதல் வேட்பாளராக அறிவித்துள்ள அகாலி தளம் வாரிஸ் பஞ்சாப் டீ என்ற கட்சியின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தான் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்காக அகாலி தளம் வாரிஸ் பஞ்சாப் டீ (Akali Dal Waris Punjab De or ADWPD) என்ற கட்சி தனது முதல் வேட்பாளரை அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை அந்த கட்சியை சேர்ந்த செயல் தலைவர் தர்செம் சிங் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: ''பஞ்சாப்பிற்காக தியாகம் செய்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் முதல் வேட்பாளர் அறிவிக்கப்படுகிறது. பாசி பதனா சட்டசபை தொகுதியின் வேட்பாளராக சாத்வந்த் சிங் போட்டியிடுகிறார்.
தேர்தல் சார்ந்த கணக்கீடுகளால் மட்டுமே கட்சி செயல்படுவத இல்லை. பந்திக் (Panthic) கொள்கைகள், பஞ்சாபின் உரிமைகள் மற்றும் பஞ்சாப்பிற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும வகையில் தான் நம்முடைய அரசியல் வேரூன்றி உள்ளது'' என்றார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி சுட்டு கொலை செய்யப்பட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த பியந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோர் இந்திரா காந்தியை சுட்டு கொன்றனர். இதில் பியந்த் சிங் உடனடியாக பிற பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அதேவேளையில் சத்வந்த் சிங் தூக்கிலிடப்பட்டது. அதேபோல் இந்திரா காந்தியை சுட்டு கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக கைதான கேஹர் சிங்கும் தூக்கிலிடப்பட்டார். தற்போது அவரது மகன் முதல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாத்வந்த் சிங்கை வேட்பாளராக அறிவித்துள்ள அகாலி தளம் வாரிஸ் பஞ்சாப் டீ என்பது காலிஸ்தான் ஆதரவு கட்சியாக பார்க்கப்படுகிறது. இந்த கட்சி கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தான் தொடங்கப்பட்டது. அதாவது காலிஸ்தான் ஆதரவாளராக அறியப்படும் அம்ரித்பால் சிங் என்பவர் துபாயில் இருந்து 2022ம் ஆண்டு பஞ்சாப் வந்தார். இவர் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பின் காடூர் சாஹிப் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பிறகு அவர் 'வாரிஸ் பஞ்சாப் டீ' (Waris Punjab De) என்ற அமைப்பை தொடங்கி தலைவரானார். இதன்மூலம் போதைப்பொருளுக்கு எதிராக பிரசாரம் செய்தார். அதுமட்டுமின்றி பஞ்சாப்பில் சீக்கியர்களின் கனவான காலிஸ்தான் அரசை நிறுவ வேண்டும் என்று சீக்கிய இளைஞர்களிடம் பேசினார். இவருக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவு உள்ளதாக உளவுத்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து கடந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் உள்ளார்.
இவரது கைது நடவடிக்கையை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அகாலி தளம் வாரிஸ் பஞ்சாப் டீ என்ற கட்சியை தொடங்கினர். அதன் தலைவராக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வரும் நிலையில் அவரது தந்தை தர்செம் சிங் செயல் தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் இந்திரா காந்தி படுகொலையுடன் தொடர்பு கொண்டு தூக்கிலிடப்பட்ட கேஹர் சிங் என்பவரின் மகன் சாத்வந்த் சிங்கிற்கு பஸ்ஸி பதானா சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக அகாலி தளம் வாரிஸ் பஞ்சாப் டீ கட்சி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
