அரியானா.. “பசு” பேரில் பயங்கரம்! 2 முஸ்லிம்களை எரித்த பஜ்ரங்தள் நிர்வாகி! கொலையாளியை ஆதரித்து பேரணி
பசுவை கடத்தியதாக 2 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கைதான பஜ்ரங்தள் மோனுவை ஆதரித்து நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்றுள்ளனர்.
சண்டிகர்: அரியானாவில் பசுவை கடத்தியதாக கூறி 2 இஸ்லாமிய இளைஞர்களை காருடன் எரித்துக் கொலை செய்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக கைது செய்யப்பட்ட பஜ்ரங்தள் நிர்வாகி மோனுவை ஆதரித்து அவரது சொந்த ஊரில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாகவே மத ரீதியான வன்முறைகள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வட மாநிலங்களில் குறிப்பாக இஸ்லாமியர்கள், தலித்துகள் மீதான கும்பல் படுகொலைகள் தொடர்ந்து பெருகி வருகின்றன.
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் பசுவின் பேரில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள்.

எரித்துக்கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள்
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியை சேர்ந்த ஜுனைத் மற்றும் நசீர் ஆகிய 2 இளைஞர்களை காணவில்லை என்றும் அவர்களின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார்கள். பசுவை கடத்தியதாக கூறி பஜ்ரங்தள் அமைப்பினர் இருவரையும் கடத்தி சென்றுவிட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

எரிந்து கிடந்த கார்
ஆனால், ராஜஸ்தான் போலீசார் உடனே அவர்கள் தெரிவித்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 பேரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவர்களை தேடி இருக்கிறார்கள். இந்த நிலையில் அரியானா மாநிலம் பிவானியில் கார் ஒன்று எரிந்த நிலையில் மர்மமான முறையில் கிடந்து இருந்ததை கண்டுள்ளனர்.

இருவர் பலி
எரிந்து கிடந்த அந்த காரில் 2 உடல்கள் கருகிய நிலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு கிடந்துள்ளன. இதனை அடுத்து அவர்கள் யார் என்று போலீசார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பஜ்ரங்தள் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட ஜுனைத் மற்றும் நசீர் ஆகியோர் என்பது உறுதி செய்யப்பட்டது.

போலீசாருடன் நெருக்கம்
கொல்லப்பட்ட இருவரும் ராஜஸ்தான் மாநிலம் சிக்ரியில் உள்ள தங்களின் உறவினர் வீட்டுக்கு சென்றபோது ஹரியானா மாநிலம் காவல்துறை மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக அவர்களின் உறவினர் முஹம்மது ஜாபிர் தெரிவித்து உள்ளார். இருவரையும் போலீசார் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் கொடூரமாக தாக்கியதாக அவர் குற்றம்சாட்டினர்.

கைது செய்த போலீஸ்
இதனை தொடர்ந்து இருவரையும் கொலை செய்த குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மோனு மானேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து இருக்கின்றனர். அவர்களுடன் டாக்சி ஓட்டுநர் ரிங்கு சைனியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கைது செய்யப்பட்டவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்து உள்ளது.

அதிர்ச்சி தகவல்
கைதான முதன்மை குற்றவாளியான பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மோனு ராஜஸ்தானில் பசு பாதுகாப்பு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் இருக்கும் படங்களை பகிர்ந்து உள்ளார். அவரது பேஸ்புக் பக்கத்தை 83 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள்.

யூடியூப் சேனல்
இதே போல் யூடியூப் சேனல் ஒன்றையும் மோனு நடத்தி வருகிறார். பசுவை கடத்திச் செல்பவர்களை பிடிப்பது, தாக்குவது போன்ற வன்முறை வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் 2 லட்சத்துக்கு 5 ஆயிரம் பேர் அவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து உள்ளார்கள். இதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யூடியூப் அவரை பாராட்டி சில்வர் பட்டன் விருதை வழங்கி உள்ளது.
|
ஆதரவாக பேரணி
இந்த நிலையில் மோனுவை கைது செய்ததை கண்டித்து அவருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குருகிராமில் உள்ள மோனுவின் சொந்த ஊரான மானேசரில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பியவாறு பலர் பேரணி சென்றனர்,












Click it and Unblock the Notifications