நள்ளிரவில் வெளியான வேட்பாளர் பட்டியல்.. ஹரியானா காங்கிரஸில் ஏற்பட்ட திடீர் குழப்பம்! காரணம் இதுதான்
சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பில் காங்கிரஸ் தரப்பில் மிகுந்த தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தாமதம், தேர்தலுக்கு அக்கட்சி இன்னும் முழு வேகத்தில் தயாராகவில்லையோ என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஹரியானாவில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. இந்த பிளானின் மாஸ்டர் மூவ்தான், வினேஷ் போகத்தை காங்கிரஸில் இணைப்பது. மல்யுத்த போட்டியில் பயிற்சி பெறும் பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை எழுப்பியதிலும், அதை போராட்டமாக மாற்றியதிலும் வினேஷ் போகத் பங்கு மிகப்பெரியது.

இந்த போராட்டத்தின் பின்னால், நாடே அணி திரண்டது. இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மறுபுறம் ஒலிம்பிக் போட்டியில், உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்திய போகத், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எடை இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தங்க பதக்கம் மிஸ்ஸானது. எல்லா விஷயத்திலும் போராடிய வினேஷ் மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இந்நிலையில்தான் போகத் காங்கிரஸில் இணைக்கப்பட்டார்.
இதெல்லாம் காங்கிரசுக்கு பாசிட்டிவாக இருந்தாலும், மாநில அளவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும், அதை அறிவிப்பதிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. அதாவது கடைசி கட்ட வேட்பாளர் பட்டியல் நள்ளிரவிலும், அதிகாலையிலும் அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்களை அறிவிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு கட்சி நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை கைகாட்டியிருக்கிறார்கள். அதாவது, கட்சி தலைமை இதுதான் வேட்பாளர் பட்டியல் என்று ஒன்றை தயார் செய்து வைத்திருந்திருக்கிறது. ஆனால், இதை வெளியிடும் நேரத்தில், ஹூடா உள்ளே புகுந்து குட்டையை குழப்பியுள்ளார். அவருக்கு ஆதரவாளர்களின் பெயர்களை லிஸ்ட்டில் இணைப்பதற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார். எனவே, கட்சி தலைமையும் வேறு வழியின்றி பரிந்துரையை ஏற்றிருக்கிறது.
இதுதான் வேட்பாளர் பட்டியல் தாமதமாக வெளியாக காரணமாகும். இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி கடத்தல் விவகாரங்களில் ஹரியானாவின் பெயர் பலமாக அடிபட்டிருந்தது. இப்படி இருக்கையில் விரைவில் இந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன. பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன.
மறுபுறம் ஜனநாய ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. எனவே இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications