Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் பெரிய ரிஸ்க்.. ஹரியானாவில் வினேஷ் போகத் வெல்வாரா? ஜுலானா தொகுதியில் கஷ்டம் தான் போலயே

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் ஜுலானா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வெல்வாரா? களநிலவரம் என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக நவாப் சிங் சைனி உள்ளார். இந்த நிலையில் ஹரியானா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் என்பது விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனால் தற்போது ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கான தேதி என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

haryana assembly election 2024 congress vinesh phogat

இங்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஹரியானாவை பொறுத்தவரை மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

ஹரியானாவை பொறுத்தவரை தற்போது ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இருகட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதேபோல் ஆம்ஆம்தி, ஜனநாயக ஜனதா கட்சி, ஆசாத் சாமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில் தான் நேற்று காங்கிரஸ் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் 31 தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. இதில் புதிதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் பெயரும் இடம்பெற்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அங்கிருந்து நாடு திரும்பிய வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் தற்போது அவர் ஜுலானா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தான் வினேஷ் போகத் இந்த தேர்தலில் வெல்வாரா? அவர் போட்டியிடும் ஜுலானா தொகுதி நிலவரம் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஜுலானா தொகுதி என்பது கடந்த 1967 முதல் சட்டசபை தேர்தலை சந்தித்து வருகிறது. இதுவரை இடைத்தேர்தல் உள்பட மொத்தம் 14 தேர்தல்களை இந்த தொகுதி எதிர்கொண்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தலா 2 முறை ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக்தளம் கட்சிகளும், ஸ்வாதந்திரா கட்சி, என்சிஎன், லோக்தளம், ஹரியானா விகாஸ் கட்சி, இந்திய தேசிய லோக்தளம், ஜனநாயக் ஜனதா கட்சி உள்ளிட்டவை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

இந்த தொகுதியில் கடைசியாக காங்கிரஸ் கட்சி 2000, 2005ம் ஆண்டு நடந்த சட்டபை தேர்தல்களில் வெற்றி பெற்றது. அதன்பிறகு 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்றனர். 2009 ம் ஆண்டில் நடந்த தேர்தலில் இந்திய தேசிய லோக்தளம் வேட்பாளர் பர்மிந்தர் சிங் 45,576 ஓட்டுகள் பெற்று வென்றார். காங்கிரஸ் வேட்பாளர் சேர் சிங் 32, 765 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதில் பாஜக வேட்பாளர் ஜஹாவர் சிங் சைனி 2,508 ஓட்டுகளுடன் 5ம் இடம் பிடித்தார்.

அதேபோல் 2014 சட்டசபை தேர்தலில் மீண்டும் இந்திய தேசிய லோக்தளம் வேட்பாளர் பர்மிந்தர் சிங் வென்றார். இவர் 54,636 ஓட்டுகள் பெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் தர்மேந்தர் சிங் 31,826 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் சஞ்சீவ் 12,013 ஓட்டுகளுடன் 4ம் இடம் பிடித்தார்.

கடைசியாக 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜேஜேபி கட்சி வேட்பாளர் அமர்ஜீத் தாண்டா 61,942 ஓட்டுகள் பெற்று வென்றார். பாஜக வேட்பாளர் பர்மிந்தர் சிங் 37,749 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் காங்கிரஸ் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் தர்மேந்தர் சிங் வெறும் 12,440 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

இந்த 3 தேர்தல்களின் அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் பலவீனமாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் வினேஷ் போகத் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் உண்மையில் அவருக்கு அக்னி பரீட்சையாக இருக்கும். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் கணக்கு என்பது வேறு விதமாக உள்ளது. அதாவது ஜுலானா தொகுதியில் விவசாயிகள் மற்றும் ஜாட் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் உள்ளனர்.

இதுதவிர ஆளும் பாஜக மீது அதிருப்தி உள்ளது. அதேவேளையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் மக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சர்வேக்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி வினேஷ் போகத் நாடறிந்த மல்யுத்த வீராங்கனை. பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகரிப்பால் பதக்கத்தை பறிகொடுத்தது தொடர்பான அனுதாபம் உள்ளிட்டவை உள்ளது. இது ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத்துக்கு நிச்சயம் கைக்கொடுக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இருப்பினும் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ளது. அரசியலை பொறுத்தவரை ஒருநாள் என்பதே அதிகம் என கூறப்படுவது உண்டு.

இதனால் தேர்தல் கோதாவில் குதித்துள்ள மல்யுத்த வீராங்கனை ஜெயிப்பாரா? இல்லையா? என்பது அவரது பிரசாரத்தை பொறுத்தும், அக்டோபர் 5ம் தேதி மக்கள் வாக்களிப்பதை பொறுத்தும் தான் அமையும். உண்மையில் ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் வெல்வாரா? என்பதை அறிய தேர்தல் முடிவு வெளியாகும் அக்டோபர் 8 ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+