10 ஆயிரம் கோடி ஹைடெக் திட்டங்கள்.. சென்னை முழுக்க மெட்ரோ ரயில்! - திமுக மாஸ்டர் ப்ளான்
சென்னை: சென்னை மாநகருக்கு என்று தனித் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள திமுக, அதில் பல ஹைடெக் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளது.
திமுகவுக்கும் சென்னைக்கும் இடையேயான அரசியல் பந்தம் பல ஆண்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தக் கட்சி தமிழ்நாட்டிலேயே முதன்முறையாகக் கைப்பற்றிய மாநகராட்சி சென்னைதான். ரிப்பன் மாளிகையில் பல கட்சி சார்ந்தவர்கள் மேயராக பதவி வகித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மேயராக இருந்த காலத்தில்தான் பூண்டி நீர்த் தேக்கத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இன்று சென்னை குடிநீர் பிரச்சனையிலிருந்து தப்பிப் பிழைத்து வருவதற்கு இத்திட்டம் முக்கிய காரணமாகும். அதைப்போன்று மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில், சென்னை முழுக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதற்கு முன்னதாக மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் அண்ணா மேம்பாலம் என்பது மிகப் பிரம்மாண்ட திட்டமாக உருவாக்கப்பட்டது.
போக்குவரத்து பிரச்சனையைத் தீர்க்க இன்றுவரை இந்தப் பாலம் செயல்பட்டு வருகிறது. இப்படிப் பல முன்னேற்றங்கள் திமுக ஆட்சிக்காலத்தால் சென்னை மாநகரம் பெற்றது. இந்த 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் சென்னைக்கு என்றே தனி தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. அதில் பல வாக்குறுதிகளை அக்கட்சி அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரமாகக் கருதப்படும் சென்னைக்கு என்று வேறு எந்தக் கட்சிகளும் தனி தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. சென்னை எந்த அளவுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் உள்கட்டமைப்பில் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை விளக்கும் விதமாக மாற்றுத்திறனாளி ஒருவர் கடந்த சில தினங்கள் முன்னதாக ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அது பலரது கவனத்தை ஈர்த்தது.
அந்த மாற்றுத் திறனாளியின் உடல் பாகங்கள் எதுவும் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி, சிலரின் உதவியோடுதான் பயணிக்க முடியும் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் பேருந்து வசதி, மற்றும் மெட்ரோ வசதி ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகள் யாருடைய உதவியும் இன்றி, தன் சொந்தக் காலில் நின்று பயணம் செய்ய முடிகிறது என்பதை அவரது காணொளி விளக்கி இருந்தது.
அனைத்து இடங்களிலும் சக்கர நாற்காலிகள் செல்லக் கூடிய அளவு சாய்வு தளங்கள், தரையிலே பொருத்தப்பட்டுள்ள மின் படிக்கட்டிற்கான ஸ்விட்ச் ஆகிய மாற்றங்களை அந்த மாற்றுத் திறனாளி சுட்டிக்காட்டி இருந்தார். இந்த மாற்றத்தை வரவேற்றும் இருந்தார். அந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்ததை போலவே விமர்சனங்களுக்கும் உள்ளானது. அவர் பணம் பெற்றுக்கொண்டு திமுகவுக்கு ஆதரவாகக் காணொளி தயாரித்து வெளியிட்டுள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் கிளம்பின. அதற்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் உள்கட்டமைப்புகள் மாற்றுத் திறனாளிகளின் நலனை மனதில் கொண்டு எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை அவர் விளக்கினார். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு எந்தளவுக்கு முன்னேற்றத்தை உண்டாகி இருக்கிறது என்ற புள்ளி விவரத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.
இதுவரை பிறரிடம் உதவி பெறுபவர்களாக இருந்த மாற்றுத்திறனாளி சமூகத்தினர் இந்த அரசியல் அதிகாரம் மூலம் பிறருக்கு உதவுபவர்களாக எப்படி மதிப்பைப் பெற்றுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். சென்னையை மையமாக வைத்தே அவர் இந்த காணொளியைத் தயாரித்திருந்தார்.
அதை ரீட்வீட் செய்த முதல்வர் ஸ்டாலின், வரும் காலங்களில் இந்த வசதிகள் பிற மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். வரும் 2.0 திராவிட மாடல் ஆட்சியில் சென்னை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் 'குடியிருப்போர் நல மகளிர் சங்கம்' மூலம் அரசு உதவிகளைப் பெற எங்கும் அலையாமல் நேரடியாகப் பெற மையங்கள் அமைக்க வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ குடிநீர் இல்லாத குடியிருப்புகளுக்கு ஆர்ஓ குடிநீர் வசதி செய்து தரப்படும் என்றும், இணைப்பு உள்ளவர்களுக்குக் குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது திமுக. மேலும் அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் மின்விளக்குகள் அமைக்கப்படும் என்றும் கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கு என்று உலகத் தரப் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்தத்திற்கும் மெட்ரோ நிலையத்தையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது திமுக. மெட்ரோ விரிவாக்கப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும் என்றும் 2027க்குள் பாதாளச் சாக்கடைத் திட்டம் முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாய் தொல்லையைச் சரிசெய்யக் காப்பகங்கள் மற்றும் மூன்று மடங்கு நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்த்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஏஐ, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட், கேமிங் ஆகியவற்றிற்குச் சிறப்பு மையங்களை உருவாக்க 10 ஆயிரம் கோடி முதலீடு செய்யவும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது.
இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதுபற்றிப் பேசிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், "சென்னைக்கும் திமுகவுக்குமான உறவு நீளமானது. ஒரு மாநிலக் கட்சியான திமுக முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியைத்தான் கைப்பற்றியது.
திமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்னதாகவே இது நடைபெற்றது என்பதை நான் கவனப்படுத்த விரும்புகிறேன். கடந்த 'திராவிடல் மாடல்' ஆட்சியிலேயே திமுக சென்னைக்குத் தனிக் கவனம் செலுத்திப் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதைப் பிரச்சார களத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசிவருகிறார்.
இதுவரை என்ன செய்துள்ளோம்? என்ன செய்யப் போகிறோம் என்பதை மிகத் தெளிவாக முன்வைக்கிறார். மத்திய அரசு முன்னதாகவே மெட்ரோ சிட்டி புராஜெட் பணிகளுக்கு நிதி அளிப்பதைத் தவிர்த்து வருகிறது. பல வேலைகள் அதனால் முடக்கப்பட்டுள்ளன. அதை மீறி, ஒரு மாநில அரசே அதற்காக செலவினங்களைச் செய்து வருகிறது. இதனால் நிதிச் சுமை அதிகரித்தாலும் பரவாயில்லை என மத்திய அரசு வழங்கவேண்டிய பங்கைக்கூட மாநில அரசே செலவழித்து சென்னை மெட்ரோ திட்டங்களை முடுக்கி விட்டுள்ளது" என்கிறார்.
-கடற்கரய்














Click it and Unblock the Notifications