ஆறே மாதத்தில் 10.44 ஆயிரம் கோடி கடன்.. சுய உதவிக்குழுக்களுக்கு இது பொற்கால ஆட்சி..!
சென்னை: கடந்த 6 மாதங்களில் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 10.44 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததுமுதல் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மீது அதிக அக்கறைகாட்டி வருகிறது. குறிப்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்தத்துறை மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

குழுவில் உள்ள மகளிருக்கு ஆட்டோ ஓட்டக் கற்றுத்தருவது, சொந்தமாகத் தொழில் தொடங்கி நடத்த வங்கிகள் மூலம் கடன் உதவியை அளிப்பது எனப் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த ஆட்சிக்காலத்தில் இதுவரை 24.712 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24 நிதியாண்டில் 30,000 கோடி ரூபாய் வரை வங்கிக் கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுவில் இயக்கும் ஒருவருக்குச் சராசரியாக 5.70 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 6 மாத காலவரம்புக்குள்ளாக மட்டும் 10.44 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதில், 19,560 கோடி நிலுவையில் உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிவதற்காக சில அதிகாரிகளிடம் பேசினோம். நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், "இந்தியாவிலேயே இந்தச் சுய உதவிக்குழுக்கள் தமிழ்நாட்டில்தான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. அந்தவகையில் தமிழ்நாடுதான் இதற்கு முன்னோடி.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியின்போது 1989ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதியுதவியுடன் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் வழியே இந்தச் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப் பட்டன.
அதன்பின்னர் இத்திட்டம் சேலம், இராமநாதபுரம், விழுப்புரம், மதுரை எனப் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது" என்றார்.

அடுத்ததாகப் பேசிய அதிகாரி ஒருவர், "இந்த மகளிர் சுய உதவிக்குழு திட்டம் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் நேரடியாகப் பயன்பெறும் ஊரக மற்றும் நகர்ப்புற குழுக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்ட குழுக்கள். இதில் ஊரகப் பகுதிகளில் மட்டும் 3 கோடி குழுக்கள் உள்ளன. நகர்ப்புறத்தில் 1.30 கோடி குழுக்கள் உள்ளன. ஆக மொத்தம் 4.30 கோடி குழுக்கள்.
இவைத் தவிர அரசு சாரா நிறுவனங்களிலும் குழுக்கள் இருக்கின்றன. இவர்களுக்குக் கடன் அளிப்பதற்காகவே 30,000 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு குழுவானது கடன்பெற்றுத் திரும்பச் செலுத்தும் போது 7% அதிகமாக எவ்வளவு சதவீத வட்டித் தொகை செலுத்தப்படுகிறதோ, அந்த வட்டித் தொகையானது குழுவிற்கே திரும்ப வழங்கப்படுகிறது.

மேலும் முழுமையாகக் கடனை திருப்பி அடைத்த பின் வட்டித் தொகை கணக்கிடப்பட்டுத் திரும்ப வழங்கப்படுகிறது" என்கிறார்.
சென்னையில் மட்டும் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரையான வழங்கப்பட்டுள்ள கடன் விவரங்களைப் பார்க்கும்போது அரசு சுய உதவிக்குழுக்கள் மொத்தம் 3849 உள்ளன.
அதில் இதுவரை 21361.42 லட்சம் ரூபாய்க்கான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதைப்போன்று அரசு சாரா நிறுவன சுய உதவிக்குழுக்கள் மொத்தம் 7306 உள்ளன. அதில் 34403.71 லட்சம் ரூபாய்க்கான கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று விவரத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார் மற்றொரு அதிகாரி.

கடந்த ஆறு மாதங்களில் மிகத் தீவிரமாகச் சென்னை மாவட்டத்தில் கடன்கள் வழங்கப்பட்டதைப் போன்று பிற மாவட்டங்களில் வழங்கப்படவில்லை.
இந்த ஆறு மாதங்களில் தென்காசியில் 27% தான் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இது சென்னை வேகத்துடன் ஒப்பிடுகையில் குறைவு. அதைப்போன்று அரியலூரில் 28%, திருப்பத்தூரில் 30%, பெரம்பலூரில் 30%, மதுரையில் 30% என விகிதாச்சாரத்தில் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அதை மேற்கொண்டு வேகப்படுத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக அதிகாரிகள் இறங்கி உள்ளனர் என்கிறார் நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர்.

வங்கிகளுடன் இணைந்து இந்தச் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதில் முதல் தவணையாக ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 2வது தவணையாக 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த கட்டங்களில் இந்தத் தொகையானது உயர்ந்துகொண்டே போகும்படி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெறுவதில் இலாபம் என்னவென்றால், வட்டி விகிதம் மிகக்குறைவு. இந்தக் குழுக்களுக்குக் கடன் வழங்குவதற்கு ஆர்.பி.ஐ சில வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
அதன்படி சுய உதவிக்குழுக்கள் வங்கியில் தங்களது சேமிப்பு தொகையிலிருந்து 6 முதல் 8 மடங்கு தொகையானது மட்டுமே முதல் தவணையாக வழங்க முடியும். அதனைப் பின்பற்றித்தான் வங்கிகள் கடனை வழங்கி வருகின்றன.

சென்னை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், "2021-22 நிதியாண்டில் 2,761 குழுவிற்கு 99.6 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் 5670 குழுக்களுக்கு 252 கோடி ரூபாய்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு 10,000 குழுக்களுக்குக் கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது" என்கிறார்.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிர்வாக அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்த போது, புதிதாக 1,75,493 மகளிர் சுயஉதவிக் குழுக்களை நிறுவினார். இப்போது முதல்வராகப் பதவிக்கு வந்த பிறகு ரூ. 5.16 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 'பூமாலை' வணிக வளாகங்களைப் புனரமைத்துத் திறந்துவைத்தார்.
'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ் 'நுண் தொழில் நிறுவன நிதி' திட்டத்தை ரூ.50 கோடியில் செயல்படுத்துவோம் எனச் சட்டப்பேரவை மானியக் கோரிக் கையின்போது அரசு அறிவித்தது.
அதன்படி முதற்கட்டமாகக் கடந்த ஜூலை மாதம்தான் 10 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலா ரூ.5.60 லட்சம் கடனுதவி வழங்கினார்.
சொல்லப் போனால் இது சுய உதவிக்குழுக்களுக்கான பொற்கால ஆட்சி!












Click it and Unblock the Notifications